Published : 23 Nov 2016 12:22 PM
Last Updated : 23 Nov 2016 12:22 PM

இலக்கை எட்டிய அதிமுக; தோல்வியிலும் துவளாத திமுக: திருப்பரங்குன்றம் தேர்தலில் கூட்டல், கழித்தல் கணக்குகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி இலக்கை நெருங்கிய மகிழ்ச்சியில் அதிமுகவினரும், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும் மீறி 70 ஆயிரம் வாக்குகளை தக்க வைத்துள்ளதால் தோல்வியை மறந்த நிம்மதியில் திமுகவினரும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் முடிவுகள் அதிமுக, திமுக இடையே கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த 2016 பொதுத்தேர்தலில் 22,992 வாக்குகளில் வென்ற அதிமுக தற்போது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியது. 10 அமைச்சர்கள் 15 நாட்களாக முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாக்காளர்கள், கட்சி நிர்வாகிகள் என பலருக்கும் நன்றாக செலவு செய்தனர். ஒரு கட்டத்தில் திமுகவை டெபாசிட் இழக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டது. வாக்குப்பதிவு 71 சதவீதமாக குறைந்ததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு ஏற்பட்டது. 50 ஆயிரம் வாக்குகளுக்கும் குறையாமல் வித்தியாசம் இருந்தால்போதும் என்ற மனநிலைக்கு வந்தனர்.

இந்த இலக்கை எட்ட முடியா விட்டாலும், 42,670 வாக்குகள் அதிகம் பெற்று வென்றது. இதை பிரம்மாண்ட வெற்றியாக அதிமுக கருதினாலும், ஒரு பக்கம் கவலையும் தொற்றிக் கொண்டது. இதற்கு காரணம் திமுகவின் வாக்குகளை கணிசமாக குறைக்கும் திட்டம் எடுபடவில்லை என்பதே. கடைசி நேரத்தில் வாக்காளர்களை அணுகியதில் திமுகவின் தேர்தல் வியூகம் அவர்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத் தந்துவிட்டது.

கடந்த தேர்தலைவிட அதிமுக 19,579 வாக்குகளை அதிகம் பெற்றதால் வெற்றி வித்தியாசம் 42,670 ஆக உயர்ந்துள்ளது. இதுவே அவர்களுக்கு ஓரளவு திருப்திதான். இதற்கு, தேமுதிகவின் 11,170 வாக்குகள், பாஜகவின் ஆயிரம் வாக்குகள் இழப்பும், கூடுதலாக பதிவான 5,620 வாக்குகளுமே முக்கிய காரணம்.

திமுக வாக்குகளை இழக்காத நிலையிலும், அதிமுகவின் வாக்கு வித்தியாசம் அதிகரித்தது. இதற்கு மிக முக்கியம் 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமனம், வாக்குப்பதிவு நாளில் இவர்களின் செயல்பாடு, இதை கண்காணித்தது, ஆளுங்கட்சிக்கே உரிய சாதகமான அம்சங்கள் அதிமுக வெற்றிக்கு சாதகமானது.

அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியடைந்தாலும், கடந்த தேர்தலில் பெற்ற 70 ஆயிரம் வாக்குகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டது திமுகவிற்கு கவலையை மறக்கடிக்கும் அளவிற்கு நிம்மதியை தந்துள்ளது. திமுக வேட்பாளர் சார்ந்த சமூக வாக்குகள், சில பகுதிகளில் திமுக நிர்வாகிகளின் திட்டமிட்ட பணி போன்றவைகளால் அதிக வாக்குகள் பெற முடியும் என திமுக கருதியது. இது ஓரளவு சரிதான் என தேர்தல் முடிவு காட்டியுள்ளது.

வெளியூர் பிரமுகர்கள் இல்லாததால், வாக்குப்பதிவு நாளில் திமுகவினரின் தேர்தல் பணி ஈடுபாட்டுடன் அமையாததால் அதிக வாக்குகளை பெறமுடிய வில்லை. இது தவிர நகரப்பகு தியில் அதிக வாக்குகள் பதி வாகாததும் ஒரு காரண மாக கருதப்படுகிறது. வாக்குச் சாவடிகள் வாரியாக கடந்த தேர்தலில் திமுக பெற்ற வாக்கு களை தற்போது பெறவில்லை. இதில் தலைகீழ் மாற்றங்கள் நடந்துள்ளன.

திமுகவில் தேர்தல் பொறுப் பாளர்களாக பணியாற்றி யவர் களின் செயல்பாடுகளைப் பொறுத்து பகுதிவாரியாக வாக்குகள் மாறியுள்ளன. இதனால் வாக்குச்சாவடிகள் வாரியாக கணக்கிட்டால், திமுகவிற்கு ஒருபக்கம் இழப்பும், மறுபக்கம் ஆதாயமும் கிட்டியதால் வாக்குகளை சமப்படுத்திக்கொண்டது. இதை அதிமுகவினரால் கட்டுப்படுத்த முடியாததும் தெரிந்துள்ளது. இது குறித்து அதிமுக, திமுக விவாதங்களை நடத்திவருகிறது.

அமைச்சர்கள் தாங்கள் பொறுப் பாளர்களாக பணி யாற்றிய பகுதி களில் பெற்ற வாக்கு விவரங் களை ஒப்பிட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் உட்பட பலரிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போனில் பேசி சமாதானப்படுத்தியுள்ளார்.

23 வாக்குச்சாவடிகளில் திமுக அதிகம்

வடபழஞ்சி, நாமகலைபுதுக்கோட்டை, வடிவேல்கரை, மேலக்குயில்குடி, வேடர்புளியங்குளம், தனக்கன்குளம், விளாச்சேரி, திருநகர், பசுமலை, திருப்பரங்குன்றம், கருவேலம்பட்டி, அவனியாபுரம், பெரிய ஆலங்குளம், ஒத்தை ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள வாக்குச்சாவடி எண்களான 3,14,17, 22, 25, 28, 42, 49, 56, 58, 61, 62, 64, 91, 96, 115, 140, 192, 195, 231, 278, 279, 280 ஆகிய 23 ஊர்களில் அதிமுகவை விட திமுக அதிக வாக்குகளை பெற்றது.

இதர 268 வாக்குச்சாடிகளிலும் அதிமுகவே முந்தியது. கடந்த 2016 தேர்தலில் 213 வாக்குச்சாவடிகளில் மட்டுமே அதிமுக முன்னிலை பெற்ற நிலையில், தற்போது மேலும் 54 வாக்குச்சாவடிகளில் முதல் வாக்கு பெற்றுள்ளது.

திமுக வேட்பாளர் பா.சரவணனின் சொந்த ஊரான ஒ.ஆலங்குளத்தில்தான் அதிகபட்சமாக 378 வாக்குகள் அதிகம் பெற்றார். இந்த ஊருக்கு அருகேயுள்ள பெரிய ஆலங்குளத்திலுள்ள 2 வாக்குச்சாவடிகளிலும் திமுகவிற்கு 3,81 வாக்குகள் அதிகம் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x