

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.மதுசூதனன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த வழக்கில் முதல் எதிரியான பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு இந்திய தண்டனைச் சட்டம் 304(2) கீழ் ஒவ்வொருவர் உயிரிழப்புக்கும் என தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.47 லட்சம் அபராதம், இதை செலுத்தத் தவறினால் 2 ஆண்டுகள் மெய்க்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழனிச்சாமிக்கு இந்திய தண்டனைச் சட்டம் 467 உ/இ 197-ன் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.10,000 அபராதமும், செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் மெய்க்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிற எதிரிகளில் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், கட்டிடப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டிருந்த 11 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பு விவரங்களை முழுமையாக படித்த பின்னர் இந்த விடுவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்ய பரிசீலிக்கப்படும் என்றார் மதுசூதனன்