

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே மருதங்குடி ஆற்றில் ரூ.8 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு ஓராண்டாகியும் பாலம் கட்டுமானப் பணியை தொடங்காததால் நிகழாண்டும் மழைக்காலத்தில் போக்குவரத்து துண்டிக்கக்கூடும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சிலட்டூர் கண்மாயில் உபரிநீர் வெளியேறும் இடத்தில் இருந்து மருதங்குடி ஆறு உருவாகிறது. கனமழை காலத்தில் அங்கிருந்து பெருக்கெடுக்கும் தண்ணீர் ரத்தினக்கோட்டை, அரசர்குளம் வழியாக 40 கி.மீ பயணித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்புலி ஆற்றில் கடலில் கலக்கிறது.
கல்லணைக் கால்வாய் மூலம் பாசனம் செய்யக்கூடிய பகுதிகள் வழியாக மருதங்குடி ஆறு செல்வதால், காவிரியில் தண்ணீர் கிடைக்காத போது மருதங்குடி ஆற்று தண்ணீரையும் பாசனத்துக்காக பயன்படுத்துவது வழக்கம். தவிர, நூற்றுக்கணக்கான ஏக்கரில் பிரத்யேகமாகவும் மருதங்குடி ஆற்று தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வல்லவாரியில் இருந்து அரசர்குளம் செல்லும் வழியில் மருதங்குடி ஆற்றைக் கடக்க தரைப்பாலம் உள்ளது. பேருந்து, கனரக வாகனங்கள் என போக்குவரத்து நிறைந்த இவ்வழியில் மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது போக்குவரத்து துண்டிக்கப்படும்.
அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், பல நாட்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தரைப்பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்டித்தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.8 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஓராண்டாகியும் இதுவரை கட்டுமானப் பணியே தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியது: அரசர்குளத்தில் மருதங்குடி ஆற்றில் 100 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தம் விட்டு ஓராண்டைக் கடந்தும் பணியைத் தொடங்கவில்லை. இதனால், காட்டாற்றில் திடீரென தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை அறியாமல் ஆற்றைக் கடக்க முயற்சிப்போர் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு, பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். கூலி வேலைக்குக்கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பல நாட்கள் இந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. நிகழாண்டு பருவமழை தொடங்கியுள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து துண்டிக்கப்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, உடனடியாக பாலம் கட்டுமானப் பணியை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்தம் எடுத்தவர் ஓராண்டைக் கடந்தும் பணியைத் தொடங்காததால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வேறொருவருக்கு ஒப்பந்தம் விட வேண்டும் என்றார்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கூறியது: நபார்டு வங்கி நிதியுதவியுடன் நபார்டு கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியில் பாலம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. கட்டுமானப் பணியை தொடங்குமாறு பல முறை அறிவுறுத்தியும் ஒப்பந்ததாரர் பணியைத் தொடங்கவில்லை. எனவே, கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.