

தூத்துக்குடி/ திருநெல்வேலி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து தூத்துக் குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 5-ம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையால் தூத்துக்குடி நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழைநீரை வெளியேற்றும் பணிகளை அமைச் சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தனர். தூத்துக்குடியில் மழை காரணமாக நகர பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. குறிப்பாக குடியிருப்பு பகுதி தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி சகதிக்காடாக மாறியுள்ளது. நகரின் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், வடிகால் பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை அளவு: மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 18.4, ஸ்ரீவைகுண்டம் 26, திருச்செந்தூர் 64, காயல்பட்டினம் 47, குலசேகரன்பட்டினம் 46, சாத்தான்குளம் 25, கோவில்பட்டி 55, கழுகுமலை 59, கயத்தாறு 37, கடம்பூர் 56, எட்டயபுரம் 66.4, விளாத்திகுளம் 36, காடல்குடி 25, சூரன்குடி 14, வைப்பார் 32, ஓட்டப்பிடாரம் 39, மணியாச்சி 41, கீழஅரசடி 4, வேடநத்தத்தில் 10 மி.மீ., மழை பெய்துள்ளது.