

முல்லை பெரியாறு அணைக்காக பாடுபட்டதாக பேச திமுகவுக்கு தகுதி இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸை ஆதரித்து அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் வேடர் புளியங்குளம், சாக்கிலிபட்டி, தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரம் செய்து பேசியது:
முல்லை பெரியாறு பிரச்சினையை பற்றி திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்போகிறது. இதனால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார்.
முல்லை பெரியாறு அணையைப் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக இந்த அணையைப் பற்றி எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. கேரளா அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவிடாமல் செய்தபோதும், திமுக மவுனமாகவே இருந்தது. ஆனால், ஜெயலலிதா சட்ட ரீதியாக போராடி அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தினார். இதேபோல் காவிரி பிரச்சினையிலும் வென்றார். விரைவில் கச்சத்தீவிலும் வெல் வார்.
இத்தொகுதியில் தேமுதிக எம்எல்ஏவாக இருந்தவர், இப்பகுதிக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வென்றால் தொகுதியின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பார் என்றார். அமைச்சர் ராஜலட்சுமி, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உள் ளிட்டோர் பங்கேற்றனர்