

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் வடக்கிழக்கு பருவமழைக் காரணமாக அரக்கோணத்தில் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தீவிரமடைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 வரை அதிகபட்சமாக அரக்கோணத்தில் 43.80 மி. மீ., காவேரிப்பாக்கத்தில் 29, அம்முர், கலவையில் தலா 20.40, வாலாஜா, ஆற்காட்டில் தலா 18.80, சோளிங்கர் 13.30, மழை பதிவாகியது.
தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று காலை முதல் அரக்கோணம், காவேரிப்பாக்கம் உட்பட பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
மேலும், தொடர் மழைக்காரணமாக அரக்கோணத்தில் மேல்பாக்கம் கிராமத்தில் ஒரு குடிசை வீடும், பின்னாவரத்தில் 2 குடிசை வீடுகளும், நெமிலி வட்டத்தில் சயனாபுரம் கிராமத்தில் ஒரு ஓட்டு வீடு மற்றும் ஒரு குடிசை வீடு என மொத்தம் 5 வீடுகள் பகுதியளவு தேசமடைந்துள்ளன. மேலும், மழையால் வீடு சேதமடைந்தவர்களுக்கு நிவாரணத்ம் வழங்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
மேலும், அரக்கோணம் வட்டம் காளிவாரிகண்டிகை பகுதியில் மழையால் ஏற்பட்ட கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் சரி செய்யும் பணியை பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர். இதேபோல், ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சாலையில் தொடர் மழையால் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக நகரமன்றத்தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் உத்தரவின்படி ஜல்லிகற்கள் மற்றும் ஜல்லி மண் கொட்டி சீரமைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தில் பல்வறு இடங்களில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி அனைத்து துறை அதிகாரிகளும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்சியரின் உத்தரவின்படி மழையால் பாதிக் கப்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.