Published : 02 Nov 2022 03:41 PM
Last Updated : 02 Nov 2022 03:41 PM

சென்னையில் இன்று மாலைக்குள் மழைநீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என் நேரு, "சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சராசரியாக இரண்டு நாட்களில் 20.55 செ.மீ. மழை சென்னையில் பெய்துள்ளது. கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிக மழை பதிவாகியுள்ளது.

புளியந்தோப்பு, கொளத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டும் தான் மழை நீர் தேங்கி உள்ளது. திரு.வி.க நகர் பகுதியில் 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அளவிற்கு அதிகமாக பெய்த மழையே இந்த பகுதிகளில் மழை நீர் தேங்க காரணம். இருந்தும் மழை நீர் தொடர்ந்து வடிந்து வருகிறது.

சென்னையில் மழைநீரை வெளியேற்ற மொத்தமாக 536 மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இதில் 156 மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது. 3 சுரங்கப்பாபதையில் மழை நீர் தேங்கியுள்ளது. 169 முகாம்கள் சென்னையில் தயாராக உள்ளது. மழை நீர் தேங்கிய இடங்களில் தண்ணீரை இன்று மாலைக்குள் முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்கப்படும். 200 வார்டுகளிலும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும். வாய்ப்பு இருப்பின் முதலமைச்சர் மருத்துவ முகாம்களை தொடங்கி வைப்பார். சென்னை மாநகராட்சி மண்டலங்களில் தற்போதைக்கு கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியமர்த்த தேவையில்லை" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x