

சென்னை: வடபழனி 100 அடி சாலையில் ரெடிமேட் முறையில் ஒரே இரவில் மழைநீர் கால்வாய் கட்டமைப்பை நெடுஞசாலைத்துறை அதிகாரிகள் அமைத்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை வடபழனி 100 அடி சாலை அரும்பாக்கம் அருகே நேற்று முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக வடபழனி 100 அடி சாலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரே நாள் இரவில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு சாலையில் 10 அடி பள்ளம் தோண்டி மழை நீர் வடிகால்வாய் கட்டமைப்பை உருவாக்கினர். மேலும் சாலையில் இருக்கும் மழை நீரை உயர் ரக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீரை உறிஞ்சி வடிகால் வாய் மூலம் அரும்பாக்கம் கால்வாய்க்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.