

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை என்றும் இதற்கு சென்னை மாநகராட்சிக்கு ரயில்வே கோட்ட மேலாளர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து வரும் மழைநீர் எழும்பூர் ஆன்ட்ரூஸ் தேவாலயத்தை கடந்து எழும்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளப்பகுதியை வந்தடையும். இதன் காரணமாக மழை நாட்களில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில்கள் அனைத்தும் வேகம் குறைத்து இயக்கப்படும்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுக்கு இடையே ரயில் தண்டவாளப் பகுதி அமைந்துள்ளதால் பள்ளம் தோண்டி இணைப்பு கால்வாய் ஏற்படுத்துவது சவாலாக இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு சென்னை மாநகராட்சி மூலம் நவீன துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி ஆண்ட்ரூசாலை முதல் கூவம் ஆறு வரை தரைக்கு அடியில் துளையிட்டு குழாய்களை பதித்தனர்.
இதன் காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கவில்லை. இது குறித்து சென்னை கோட்ட மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழைக்காலங்களில் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக மழைநீர் தேங்கும் நிலையில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை. மழைநீர் தேங்காததால் வழக்கமான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எஞ்சிய ரயில் நிலையங்களிலும் இதுபோன்ற பணி மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம்" இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
.