தமிழகத்தில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை; கூடுதலாக 48 லட்சம் தடுப்பூசி... - ஆர்டிஐயில் சுகாதாரத் துறை விளக்கம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை; கூடுதலாக 48 லட்சம் தடுப்பூசி... - ஆர்டிஐயில் சுகாதாரத் துறை விளக்கம்

Published on

சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பூசி வீணாக்கப்படவில்லை. மத்திய அரசு கொடுத்ததைவிட கூடுதலாக 48 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல் அறியும்உரிமை சட்டத்தில் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜன.16-ம் தேதி தொடங்கியது. 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு அரசுமருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அதேநேரம், 18 முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனியாரில் ரூ.386 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகம் 7-வது இடம்: இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை 39.02 கோடி டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளது. 17.74 கோடி டோஸ்களுடன் மகாராஷ்டிரா 2-வது இடமும், 15.67 டோஸ்களுடன் பிஹார் 3-வது இடமும், 15.57 டோஸ்களுடன் மேற்குவங்கம் 4-வது இடமும், 13.35 டோஸ்களுடன் மத்தியப்பிரதேசம் 5-வது இடமும், 12.74 டோஸ்களுடன் குஜராத் 6-வது இடமும் பெற்றுள்ளன. 12.71 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி தமிழகம் 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை எவ்வளவு கரோனா தடுப்பூசிகள் வீணாகியுள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டது. அதற்கு தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககம் (டிபிஎச்) அளித்த பதில் வருமாறு:

மத்திய அரசின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஜன.16 முதல்கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்.6-ம் தேதி வரை மொத்தமாக 11 கோடியே 55 லட்சத்து 63,680 டோஸ் கரோனா தடுப்பூசிகள் மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்பட்டன. அரசு கரோனா தடுப்பூசி மையங்கள் மூலம் 12 கோடியே 3 லட்சத்து 68,834 டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி 48 லட்சத்து 5,154 டோஸ் தடுப்பூசிகள் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி சேதத்தின் அளவு மைனஸ் 4 சதவீதம் ஆகும். இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா தடுப்பூசிக்கான ஒரு குப்பியை திறந்தால் குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் 10 பேருக்கு தடுப்பு மருந்தை செலுத்த வேண்டும். குப்பியை திறக்கும்போதும், மருந்தை ஊசியில் எடுக்கும்போதும் வீணாவதை கணக்கில் கொண்டு 11 பேருக்கு செலுத்துவதற்கான தடுப்பு மருந்து குப்பியில் இருக்கும்.

சரியான திட்டமிடல்: ஆரம்பகட்டத்தில் தடுப்பூசி செலுத்த தொடங்கியபோது போதிய விழிப்புணர்வு இல்லாததால் சில மாதங்கள் தடுப்பூசிகள் வீணாகின. அதன்பின், தடுப்பூசி வீணாவது தடுக்கப்பட்டது.

அதேநேரத்தில் குப்பியில் கூடுதலாக உள்ள தடுப்பு மருந்தையும்சரியாக திட்டமிட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசு வழங்கிய டோஸ்களைவிட கூடுதலான டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ளன” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in