

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகப் பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வும்ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றுமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
2-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள்,கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3, 4-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
5-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
செங்குன்றத்தில் 13 செ.மீ. மழை: நவ.1-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 13 செமீ, சென்னை பெரம்பூரில் 12 செமீ,சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் நவ.1-ம் தேதி பதிவான மழை அளவுகளில் 3-வது அதிகபட்ச மழை அளவாகும். கடந்த 1967-ம் ஆண்டு நவ.1-ம்தேதி 13 செமீ, 1990-ம் ஆண்டு நவ.1-ம் தேதி 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.