புதிய தேசிய கல்விக் கொள்கை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் - திருச்சியில் மத்திய அமைச்சர் சுபாஷ் சர்கார் உறுதி
திருச்சி: புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு இதுவரை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதிய கல்விக் கொள்கை விரைவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்தார்.
திருச்சி அண்ணா நகர் கேந்திரிய வித்யாலயா மற்றும் பழங்கனாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திருச்சியில் கேந்திரிய வித்யாலயா மற்றும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன். இதில்,அரசுப் பள்ளி உட்பட பல கல்விநிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கை அம்சங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக மக்களிடம் தெரிவித்தாலும், இதுவரை நேரடியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பித்து வருகின்றன.
புதிய கல்விக் கொள்கை விரைவில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசு அதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு மிகுந்த அக்கறைகொண்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழக மக்களிடையே பாஜக மீதான ஆதரவு பெருகி வருவதையும் காண முடிகிறது. இந்த ஆதரவால் வரும் 2024-ல் நடைபெற உள்ளமக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் குறைந்தது 20 இடங்களில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
