தனியார் பள்ளிகள் துறை புதிய இயக்குநர் நியமனம்
சென்னை: தனியார் பள்ளிகள் துறை இயக்குநராக இருந்த கருப்பசாமி பணி ஓய்வுபெற்றதை அடுத்து, அந்த பொறுப்புக்கு நாகராஜ முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வி ஆணையரகத்தின்கீழ் இயங்கும் தனியார் பள்ளிகள் துறை இயக்குநராக பணியாற்றிய அ.கருப்பசாமி நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். இந்த துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கருப்பசாமி, தொடக்கக் கல்வி இயக்குநரகம், முறைசாரா கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைசார் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவர் பணி ஓய்வுபெற்றதை அடுத்து, தனியார் பள்ளிகள் துறைக்கு புதியஇயக்குநராக எஸ்.நாகராஜமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கூடுதல் திட்ட இயக்குநராக பணியாற்றியவரை புதிய பொறுப்புக்கு மாற்றம் செய்வதாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கல்வி ஆணையரகத்தில் கணிசமான இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
