கோயில் உள்விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அறநிலைய துறையை கண்டித்து சென்னையில் நவ.5-ல் ஆர்ப்பாட்டம்: ஆண்டாள் கோயில் ஜீயர் அறிவிப்பு

ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர்
ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர்
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: கோயில் உள் விவகாரங்களில் இந்துசமய அறநிலையத் துறை தலையிடக் கூடாது. இதுகுறித்து முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 5-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிபாட்டு முறைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி உள்ளனர். தென் ஆச்சாரிய சம்பிரதாயமுள்ள கோயில்களில் மரபுகள் மீறப்பட்டு வருகின்றன. கோயில்நிர்வாகம் சிறப்பாக நடைபெற அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளித்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.

கோயில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை. ஆனால், ரங்கம் கோயிலில் உற்சவ நாட்களில் விஸ்வரூப தரிசனத்துக்குத் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றம் செய்து முன்பு செயல் அலுவலராக இருந்த ஜெயராம், விதிமுறைகளை திருத்திஉத்தரவிட்டுள்ளார். இதுபோன்று சில அதிகாரிகள் செய்யும் தவறால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. அறநிலையத் துறையின் தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நவ.5-ம் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in