

நாகர்கோவில்: “உலகமே இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது” என தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். பாரதிய இதிகாச சங்கலன் சமிதிதமிழ்நாடு கிளை சார்பில், நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் அமிர்தா பொறியியல் கல்லூரியில் ‘கன்னியாகுமரி தின விழா' நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சமிதியின் மாநில தலைவர் சுப்பிரமணிய பிள்ளை தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:
தமிழகத்துடன் இணைந்ததால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சர்தார் வல்லபபாய் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைக்க பாடுபட்டார். நம்முடைய கலாச்சாரத்தையும், வரலாற்றையும் வெளிநாட்டவர்கள் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது. மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு நம் நாட்டின் ஆன்மிகத்தை அழிக்கும் வகையிலும், கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும் வரலாற்றை எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடந்த பயிற்சி முகாமில் பாரதம் குறித்து அறிந்துகொள்ளும் பயிற்சி அளிக்கப்பட்டது. பாரதம் குறித்த பயிற்சிஎன்றதும் மாணவர்கள் கேலியாகசிரித்தனர். உணவு இடைவேளையின்போது பாரதம் பற்றி இவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் இருக்கிறதா என ஆச்சர்யப்பட்டனர். மாலையில் பயிற்சி முகாமை மேலும் ஒரு நாள் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பாரதம் என்றால் ஆன்மிக, கலாச்சாரம் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ள இன்னும் நிறைய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறான வரலாற்று கண்ணோட்டம் இந்தியாவில் இன்னும் உள்ளது. நம் நாட்டின் உண்மையான வரலாறு குறித்த ஆய்வுகளை இன்னும் நடத்த வேண்டும். நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியாஉலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது. உலக பொருளாதாரத்தில் 30 சதவீதம் பொருளாதாரம் நம் நாட்டில்தான் இருந்தது. பிரெஞ்ச், டச்சு, போர்த்துகீசியர்கள், பிரிட்டீஷ்காரர்கள் உள்ளிட்டோர் 150 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்துப் போய்விட்டனர். அதற்கு முன்பும் பலர் நம்மை ஆண்டார்கள். ஆனால் மேற்கத்தியர்கள் வந்த பிறகுதான் நம் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டது. நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது. கலாச்சாரம் தவறாக பரப்பப்பட்டது.
இப்போது இந்தியாவின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற ‘2047’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார். பொருளாதாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் நாம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். ஆனால் வேற்றுமையை மேற்கத்தியர்கள் பிரிவினையாக சித்தரித்துவிட்டனர்.இந்தியா என்ற குடும்பத்தில் நாம் அனைவரும் ஓர் அங்கம். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்கள், மாணவர்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. அவர்கள் எதிர்கால இந்தியாவை கட்டமைப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.