

கோவை: இந்து, இஸ்லாமிய தரப்பில் உள்ள சிறு குழுக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல்துறையினரிடம் இஸ்லாமிய மத குருமார்கள் வலியுறுத்தினர்.
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிலவிய பதற்றத்தை தவிர்த்து, கோவையில் சுமூக நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் இந்து அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், மதகுருமார்களுடனான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘‘ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு கோட்பாடு இருந்த போதிலும், அனைத்து மதங்களும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் போதிக்கின்றன.
கோவையில் அமைதி ஏற்பட்டு சுமூக நிலை நிலவ அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். எல்லா பிரச்சினைகளுக்கும் சட்ட ரீதியாக அல்லது அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உள்ளது என்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு இளைஞர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமிய மதகுருமார்கள் பேசும்போது, ‘‘தற்போது இந்து சமய தரப்பிலும், இஸ்லாமிய சமய தரப்பிலும் சிறு, சிறு குழுக்கள் அதிகரித்து விட்டன. எனவே, இந்த சிறு குழுக்களின் செயல்பாடுகளை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும்.
அப்போது தான் காவல்துறையினருடன் நாங்கள் நெருக்கமாக உள்ளோம் என்பதை எங்களது இளைஞர்களுக்கு உணர்த்தி, அவர்களை கட்டுக்குள் வைக்க முடியும். எதிர்தரப்பை சேர்ந்த சில அமைப்புகள் சிறு பிரச்சினை என்றாலும் அதனை பெரிதாக்கி பதற்ற நிலையை ஏற்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும். எந்த தரப்பை சேர்ந்தவர்கள் தவறு செய்திருந்தாலும், பாகுபாடு பார்க்காமல் சட்டப்படி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.