பாஜக மாநில நிர்வாகிக்கு போலீஸார் சம்மன்

பாஜக மாநில நிர்வாகிக்கு போலீஸார் சம்மன்
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில தொழில் நுட்பப் பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த31-ம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக தமிழகம் வர இருந்ததாகவும், மாநில அரசு பிரதமரின் வருகையின்போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தால் இந்த ஆண்டு பிரதமர் வருவது தள்ளிப்போனதாகவும் தகவல் என பாஜக மாநில தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் கடந்த மாதம் 13-ம் தேதி ட்விட்டரில் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. உண்மைக்கு புறம்பான இதுபோன்ற தகவலை சிடிஆர் நிர்மல் குமார் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சிடிஆர் நிர்மல் குமார் மீது வதந்தி பரப்புதல், கலகம் ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீஸார் கடந்த மாதம் 14-ம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்குதொடர்பாக பல்வேறு விளக்கங்கள் கேட்டு பெற வேண்டியுள்ளதால் விசாரணைக்கு இன்று (02.11.2022) நேரில் ஆஜராகுமாறு சைபர் க்ரைம் போலீஸார் சிடிஆர் நிர்மல் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். காலை 11 மணிக்கு வேப்பேரியில் உள்ள, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in