

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்கிற விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அதேபோல மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறவிடாமல் தடுக்கிற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டதன் விளைவாக தமிழக விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறுவை சாகுபடி செய்து ஐந்தாண்டுகளாகிவிட்ட நிலையில் சம்பா சாகுபடி செய்தாவது தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிற முயற்சிகளுக்கு இன்றைக்கு பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை. தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்த நிலையில் தாங்கள் நேரடி விதைப்பு மூலம் செய்த முயற்சிகள் பலனின்றி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக காவிரி டெல்டா பகுதியில் இத்தகைய விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் மன உளைச்சல் காரணமாகவே இத்தகைய தற்கொலைகள் நிகழ்கின்றன. ஏற்கெனவே காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் டிராக்டர் வாங்கிய கடனை செலுத்த முடியாதபோது வங்கி அலுவலர்கள் கொடுத்த கடும் அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அவலம் நிகழ்ந்தது.
விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்த தமிழக அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த மத்திய காங்கிரஸ் அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையான ரூ.74 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. அதைப்போல விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் எதிர்பார்த்த மழை பெய்யாத காரணத்தால் கடும் வறட்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. இதிலிருந்து விவசாயிகளை காப்பாற்றுவதற்கு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து சிறப்பு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்க மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும். இதை வலியுறுத்துகிற வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.