

ரூபாய் நோட்டு நடவடிக்கையைக் கண்டித்து திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும் என்று அக்கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசு அறிவித்துள்ள 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வரவேற்றவர்கள்கூட, அது தொடர்பாக மத்திய அரசு நாளும் அறிவித்துவரும் அறிவிப்புகளும், தொலைநோக்கு இல்லாத அணுகுமுறைகளும் பொதுமக்களை, ஏழை எளிய, நடுத்தர மக்களைப் பெரும் அவதிக்கும் நாளும் ஆளாக்கியுள்ளது குறித்து வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
சந்தடி சாக்கில் ரூபாய் நோட்டில் தேவநாகரி (சமஸ்கிருதம்) எண்ணையும் திணித்துள்ளது மத்திய அரசு. இந்த நிலையில், மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, திமுக தலைவர் கருணாநிதி வரும் 24 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் 5 மணிவரை மாவட்டத் தலைநகரங்களில் அறிவித்திருக்கும் மனித சங்கிலி அறப்போராட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும்.
திராவிடர் கழகத் தோழர்கள் ஆங்காங்கு திரளாகப் பங்கேற்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது ஒரு கட்சி சார்ந்த போராட்டமல்ல; பாதிப்புக்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அமைதியான முறையில் கையிணைக்கும் இந்த மனித சங்கிலி அறப்போரில் கட்டுப்பாட்டோடு கலந்துகொண்டு, மக்களின் குரலை மத்திய அரசுக்குத் தெரிவித்திட ஒன்று கூடுவோம்'' என்று வீரமணி கூறியுள்ளார்.