

மனிதனை மகிழ்விக்க காளைகளை துன்புறுத்தி நடத்தப்படும் நிகழ்ச்சி ஜல்லிக்கட்டு. எனவே, அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா போட்டி களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் வகையில், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து காளையை நீக்கி, கடந்த ஜனவரி 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
துன்புறுத்தும் நிகழ்ச்சி அல்ல
இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் காளைகளை துன்புறுத்தும் நிகழ்ச்சி அல்ல. எனவே, மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டம் 1960-க்கு எதிரானதாக கருத முடியாது. மேலும், மாநில அரசு என்ற முறையில் மாடுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஜல்லிக்கட்டு என்பது மத வழிபாடு தொடர்பான விளையாட்டு என்பதால், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-ன் கீழ் அடிப்படை உரிமையாக உள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது காளைகள் எந்தவிதத்திலும் துன்புறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே, தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு தனிச்சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வரையறைகளை வகுத்துள்ளது. காளைகள் துன்புறுத்தப்படும் நிகழ்ச்சி அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் தனிப்பட்ட சம்பவங்கள். அதற்காக ஒட்டுமொத்த போட்டியையும் தடை செய்வது ஏற்புடையதல்ல’ என்று வாதிட்டார்.
இந்திய பிராணிகள் நலச் சங்கம் சார்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘தமிழக அரசின் 2009-ம் ஆண்டு சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்துக்கு எதிரானது. விழா என்ற பெயரில் எந்த மிருகத்தையும் துன்புறுத் துவதை அனுமதிக்க கூடாது’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங் களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘தமிழக அரசு இயற்றியுள்ள 2009-ம் ஆண்டு சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டம் 1960-க்கு முரண்பட்டதாக அமைந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 25-ஐ ஏன் இழுக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்பது முழுக்க முழுக்க மனிதனின் பொழுதுபோக்கிற்காக காளைகளை பயன்படுத்தும் நிகழ்ச்சி. இதற்கும் மத வழிபாட்டிற் கும் தொடர்பில்லை. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து பின்னர் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஜனவரிக்குள் ஜல்லிக்கட்டுக்கு முறைப்படி அனுமதி அளிக்கா விட்டால், வரும் ஆண்டில் அனைத்து கிராமங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என வீர விளையாட்டு மீட்புக் கழகம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் டி.ராஜேஷ் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 11 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி வருகிறோம். ஆனாலும் நீதிபதிகளுக்கு இதுகுறித்த புரிதல் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ‘வீடியோ கேமில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே’ என கருத்து தெரிவித்தது வேதனையாக இருக்கிறது. நீதிமன்றத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியைப் பெற முடியும் என்ற நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்துவிட்டது.
எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க உள்ளோம். அதன்பின் மத்திய அரசுக்கு வலியுறுத்தும் வகையில் மாநிலம் தழுவிய ரயில் மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். ஜனவரிக்குள் ஜல்லிக்கட்டுக்கு முறைப்படி அனுமதி அளிக்காவிட்டால், வரும் ஆண்டில் அனைத்து கிராமங்களிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்.