

நாகப்பட்டினம்/ திருவாரூர்/ காரைக்கால்: நாகை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கின.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.
சம்பா நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலைவரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): நாகப்பட்டினம் 45.40, திருப்பூண்டி 37.60, வேளாங்கண்ணி 35, திருக்குவளை 24.20, தலைஞாயிறு 29.40, வேதாரண்யம் 59.40, கோடியக்கரை 62.80.
இதேபோல, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): திருத்துறைப்பூண்டி 21, மன்னார்குடி 22, திருவாரூர் 19, வலங்கைமான் 5.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், திருவாரூர் மாவட்டத்தில் 209 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, காரைக்கால், நெடுங்காடு, திருமலைராயன்பட்டினம், கோட்டுச்சேரி, திருநள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் உடனடியாக கரை திரும்பியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். காரைக்கால் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை அனுமதிக்காத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காரைக்காலில் நேற்று காலை நிலவரப்படி 72.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.