Published : 02 Nov 2022 04:50 AM
Last Updated : 02 Nov 2022 04:50 AM
திருவண்ணாமலை: திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தற்கு உழவர் பேரவை அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசின் சேவை மற்றும் நிதி ஆதாரம் ஆகியவை அடித்தட்ட மக்களை சென்றடைய வேண்டும் என வலியுறுத்தி உழவர் பேரவைசார்பில் தி.மலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறும்போது, “அனைத்து துறைகளின் செயல்பாடுகளும் ஊராட்சி மன்றத் தலைவர் கட்டுப்பாட்டில் கடந்த 1982-ல் இயங்கியது. இதேபோல், 2022-ல் செயல்பட வேண்டும். திருவண்ணா மலை மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு மற்றும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு பதில் இல்லை.
இதனால், குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு போராட்டம் நடத்துகிறோம். மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. கண்ணீருடன் வரும் விவசாயிகள் மற்றும் மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். வேளாண்மை துறை திட்ட கையேடு கடந்த 3 ஆண்டுகளாக கொடுக்க வில்லை.
காப்பீட்டு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் பெற வேண்டும் என்றால், பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. ஒரு பகுதியில் உள்ள விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.700, மற்றொரு பகுதியில் உள்ள விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கின்றனர். ஆனால், பாதிப்பு ஒரேமாதிரியாகதான் இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை காப்பீடு திட்டத்தில் உள்ளது.
கலசப்பாக்கத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு அலுவலர்கள் வருவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியரிடம் முறையிட்டும் வழக்கை திரும்ப பெறவில்லை. விவசாயிகள் மீது வழக்குப்பதிவுசெய்துள்ளதால், திராவிட மாடல்ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்.இது குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர், வட்ட அளவிலான கூட்டத்தை உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் மூலம் சுமூகமாக நடைபெறவும் நடவடிக்கை எடுத்தால், விடியல் பிறக்கும். திராவிட மாடல் ஆட்சியும் சிறப்பாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT