

மதுரை: தமிழகத்தில் நிர்வாகத்துறை நடுவர்களுக்கு குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் வினோத். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவர் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி உறுதிமொழி பத்திரம் வழங்கினார்.
இந்நிலையில் வினோத் கொலை வழக்கில் பல்லடத்தில் கைதானார். இதனால் அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கிய உறுதிமொழி பத்திரத்தை ரத்து செய்து, சிறையில் அடைக்க குளித்தலை நீதித்துறை நடுவர்/ கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவை ரத்து செய்யக்கோரி வினோத் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவில், "தமிழகத்தில் நிர்வாகத்துறை நடுவர்கள் குற்றவியல் நீதி பரிபாலன முறையின் அடிப்படை அம்சங்கள் தெரியாமல், புரியாமல் பெயரளவில் விசாரணை நடத்தி குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் தனி சுதந்திரத்தில் விளையாடக்கூடாது. இதனால் தமிழகத்தில் புதிதாக, பதவி உயர்வு மூலம் நிர்வாகத்துறை நடுவர்களாக பணிபுரிவர்களுக்கு குற்றவியல் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளை பின்பற்றுமாறு நிர்வாகத்துறை நடுவர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதை பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய அன்றே மனுதாரரின் உறுதிமொழி பத்திரத்தை நிர்வாகத்துறை நடுவர் ரத்து செய்துள்ளார். சாட்சிகளை விசாரிக்காமல் நிர்வாகத்துறை நடுவர் எவ்வாறு அந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதனால் குளித்தலை நிர்வாகத்துறை நடுவர்/ கோட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு கூறியுள்ளார்.