

கள்ளக்குறிச்சி: விருத்தாசலம் அருகே எம்.பட்டி கிராம ஏரியின் ஆக்கிரமிப்பை அகற்றவதற்கு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடம் ஒப்புதலைப் பெற்றார் அமைச்சர் சி.வெ.கணேசன்.
உள்ளாட்சித் தினத்தை ஒட்டி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எம்.பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகப்ரியா தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டார். அப்போது கிராமத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் தன்னிடம் சில கோரிக்கைகள் வைத்திருப்பதாகவும், அதற்கு கிராம மக்களின் ஒத்துழைப்புத் தேவை எனக் கூறியுள்ளார்.
அதன்படி இந்த ஊரில் உள்ள 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் எனக் கூறியுள்ளார். எனவே, ஊர் நலன் கருதி ஏரியை தூர்வார வேண்டும். அதற்கு அங்கிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றியாக வேண்டும். கிராம மக்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் ஏரியின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியை தூர்வார ஒப்புதல் அளிப்பவர்கள் கையை உயர்த்துமாறு கூறினார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் கையை உயர்த்தினர்.
இதனை அடுத்து கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் ''அதன்பின் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றும் போதும் மாமன், மச்சான் எனக் கூறிக் கொண்டு யாரும் சிபாரிசுக்கு வரக்கூடாது, வருவாய் துறை மற்றும் காவல்துறை உதவியுடன் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படும், இந்த கிராமத்தில் ஊராட்சி பங்களிப்புடன் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்படும், குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கப்படும்'' என்றார்.