

மதுரை; ‘‘தெருவிளக்குகள் இல்லாமல் மதுரை மாநகர சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கிறது’’ என்று இன்று நடந்த மாநகர சபை கூட்டத்தில் மேயர் இந்திராணியிடம் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சியில் இன்று 100 வார்டுகளிலும் மாநகர சபை கூட்டம் நடந்து. 57வது வார்டு ஆரப்பாளையம் மந்தை வளாகம், 75வது வார்டு சுந்தரராஜபுரம் கே.ஆர்.ரோடு மற்றும் திடீர் நகர் சமுதாய கூடம் ஆகிய இடங்களில் நடந்த மாநகர சபை கூட்டங்களில் மேயர் இந்திராணி கலந்து கொண்டார். ஆரப்பாளையம் மந்தை வளாகத்தில் நடந்த கூட்டத்தில் மேயர் இந்திராணி தலைமை வகித்தார். துணை ஆணையர் முஜிபூர் ரகுமான், மண்டலத்தலைவர் பாண்டிச் செல்வி, உதவி ஆணையர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேயர் இந்திராணி பேசுகையில், ‘‘ஆரப்பாளையம் பகுதியில் மக்கள் பயன்பெறும் பகுதியில் மகப்பேறு வசதியுடன் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் விரைவில் கட்டப்படும். மாநகராட்சியில் தற்போது அனைத்து திட்டங்களும் வளர்ச்சித்திட்டங்களாக மேற்கொள்ளப்படுவதால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழல் உள்ள குறிப்பாக பாதாளசாக்கடை பிரச்னை மாநகராட்சி முழுவதும் உள்ளது. அதனை சரி செய்வதற்கு தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் பணி செய்கின்றனர். விரைவில் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய எழில்மிகு மதுரையை உருவாக்குவதே மாநகராட்சி இலக்காக உள்ளது’’ என்றார்.
அதன்பின், பொதுமக்களுக்கு ‘மைக்’ வழங்கப்பட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பார்ப்புகள், குறைகளை பேசினர். அதற்கு மேயர், அதிகாரிகள் பதில் அளித்தார்.
பொதுமக்கள் பேசும்போது, “வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதில்லை. பொது இடங்களில் குடிநீர் குழாய் இல்லாத இடங்களில் அமைக்க வேண்டும். மாநகரின் குறைபாடுகள் நிறைய உள்ளது. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் மிக அருமையான சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாலைகளில் தெருவிளக்குகள் இல்லை. நிதி ஒதுக்கீடு செய்து இரு கரை சாலைகளிலும் தெருவிளக்கு அமைக்கப்பட வேண்டும். சாலையை விரிவாகம் நடுவில் அமைக்கப்படும் சென்டர் மீடியன் பகுதிகளிலும் தெருவிளக்குகள் இல்லை. சாலை அமைக்கும்போதே மின்சாரவாரியமும், மாநகராட்சியும் சேர்த்து விளக்குகள் அமைக்க வேண்டும். அகலமான சாலைகளில் மட்டுமே சென்டர் மீடியம் அமைக்க வேண்டும். குறுகிய சாலைகளிலும் சென்டர் மீடியம் அமைப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.
வைகை ஆற்றின் ஏவி மேம்பாலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தெருவிளக்குகளே இல்லை. இரவில் நகர சாலைகள் மோசமான இருளில் மூழ்கி கிடக்கும் அவல நிலை உள்ளது. எல்லா நகரங்களிலும் தெருவிளக்குகள் நவீனப்படுத்தப்படுகிறது. மதுரையில் மட்டும் தெருவிளக்குகள் இல்லாமல் சாலைகள் அதிகமாக உள்ளது” என்றனர்.
தகவலே தெரியாமல் நடந்த கூட்டம்: மாநகர சபை கூட்டம் எந்த இடத்தில், எந்த நாள் நடக்க இருப்பதை பொதுமக்களுக்கு மாநகராட்சி முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தகவல் தெரிவிக்கவில்லை. கூட்டம் எப்படி நடத்தப்படும், அதில் மக்கள் எந்தெந்த குறைகளை தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட எந்த விழிப்புணர்வையும் மாநகராட்சி ஏற்படுத்தவில்லை. அதனால், அந்தந்த வார்டு கவுன்சிலர்களும், திமுகவினரே ஏற்பாடு செய்த கூட்டத்தினரும், கூட்டம் நடந்த இடத்தில் அருகே வசிக்கும் மக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஆரம்பத்தில் கூட்டம் தொடங்கும்போது எல்லோருக்கும் ‘மைக்’ வழங்கப்படும், தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், கூட்டத்தில் முதலில் பேசிய சில நபர்களே மாநகராட்சி மீது அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்ததால் அதன்பிறகு யாருக்கும் ‘மைக்’ வழங்கப்படவில்லை. மேயரிடம் நேரடியாக வந்த மனு கொடுக்க வந்த ஆண்கள், பெண்களை மேயர் கணவர் தரப்பு ஆதரவாளர்கள் தடுத்து விசாரித்து புகாராக எதுவும் தெரிவிக்கக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைத்தனர். இதுபோன்ற கட்டுப்பாடுகளால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், வெளிப்படையாக எந்த குறைகளை தெரிவிக்க முடியாமல் எழுதிக் கொண்டு வந்த மனுக்களை மட்டும் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.