

என்டிடிவி இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒருநாள் தடை விதிப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமான தளத்திற்குள் கடந்த ஜனவரி 2016-ல் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதனை செய்தியாக வெளியிட்ட என்டிடிவி இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியதற்காக நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் மறுநாள் பிற்பகல் ஒரு மணி வரை தடை செய்து மத்திய செய்தி ஒளிபரப்பு துறை தடை விதித்துள்ளது. இது கருத்து சுதந்திரத்தின் குரல் வளையை நெறிக்கிற செயல் ஆகும். இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கான போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதற்காக சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஒரே நாளில் 3 முறை கைது செய்து விடுவிக்கப்பட்டார்.
இத்தகைய அராஜக செயல்களை செய்து வருகிற மத்திய பாஜக அரசு கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து கூறுகிற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் ஏற்கெனவே அச்சுறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய அராஜகத்தை தடுத்து நிறுத்த ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்து சக்திகளும் ஓரணியில் திரண்டு எதிர்த்து குரல் கொடுத்து போராடுவது காலத்தின் கட்டாயமாகும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.