Published : 01 Nov 2022 06:30 PM
Last Updated : 01 Nov 2022 06:30 PM
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் சாலையில் போரட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் இயங்கி வரும் அம்மன் ஜுவல்லர்ஸ் நகை கடை உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மங்கலம் சாலையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. போராட்டங்களின் போது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், அங்குள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மக்கள் நடமாட்டம் நிறைந்த மங்கலம் சாலைக்கு பதிலாக, நொய்யல் ஆற்றங்கரையோர காலியாக உள்ள இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், "போராட்டம் நடத்த மனுதாரர் நீதிமன்றத்திடமே அனுமதி கேட்பது போல உள்ளது. இதற்கு அனுமதியளித்தால் இது தவறான முன்னுதாரணமாகிவிடும். மேலும், நொய்யால் ஆற்றங்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வாதிட்டார். அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT