Published : 30 Nov 2016 02:17 PM
Last Updated : 30 Nov 2016 02:17 PM

சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கினால் பாமக போராட்டம் நடத்தும்: ராமதாஸ்

சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதற்கு எதிராக மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை பாமக நடத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பயன்படக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் செய்யும் மத்திய அரசு, தமிழகத்தின் நலன்களை பறிக்கும் திட்டங்களை மட்டும் மின்னல் வேகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதற்கான அண்மைக்கால உதாரணம் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவு ஆகும். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்த முயற்சியை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அரசும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் பாமக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

ஆனாலும், தமிழகத்தின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக சேலம் இரும்பாலையின் 51% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக மத்திய எஃகுத் துறை அமைச்சர் விஷ்ணுதியோ சிங் நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்கட்கிழமை அன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்திருந்த பதிலில் கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகள் வேகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்த 24 மணி நேரத்தில், பங்கு விற்பனை குறித்த தகவலை பங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்புக்கு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

சேலம் இரும்பாலை மட்டுமின்றி, பத்ராவதி இரும்பாலை, துர்காப்பூர் இரும்பாலை ஆகியவற்றின் பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. பங்குகளை வாங்கும் நிறுவனம் 2 கட்ட ஏலத்தின் மூலம் தீர்மானிக்கப்படவிருப்பதாக செபி அமைப்பிடம் மத்திய அரசின் சார்பில் இந்திய எஃகு நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த சில வாரங்களில் இரு கட்ட ஏலங்களும் நடத்தி முடிக்கப்பட்டு, சேலம் இரும்பாலை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. தொழிலாளர்களும் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் மதிக்காமல் பங்குகளை விற்பனை செய்யும் முடிவை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் இந்த விஷயத்தில் தமிழக அரசு அதன் எதிர்ப்பை வெளிப்படுத்த தவறியது தான்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று நடைபெற்ற தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ''தமிழகத்தில் செயல்பட்டு வரும் எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் தனியார் மயமாக்க முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்க மாட்டார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்த போது, அவற்றை ரூ.358.20 கோடிக்கு தமிழக அரசே வாங்கி, அவை தனியாரின் கைகளுக்கு செல்வதைத் தடுத்தது. அதேபோல், சேலம் இரும்பாலை நிர்வாகமும் தனியாரின் கைகளுக்கு செல்வதை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார்'' என்று கூறினார்.

ஆனால், அதற்காக தமிழக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடாததன் விளைவாகத் தான் சேலம் இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையை காப்பாற்றும் விஷயத்தில் தமிழக அரசு காட்டும் அக்கறை என்பது இவ்வளவு தான்.

சேலம் இரும்பாலை நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்யவே தனியாருக்கு வழங்குவதாகவும் மத்திய அரசு கூறுவது தவறாகும். இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதற்காகவே சேலம் இரும்பாலை நஷ்டமாக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. தற்போது சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்த வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதை செய்யாதது தான் சேலம் ஆலை நஷ்டத்தில் இயங்க காரணமாகும்.

சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சி அரசுக்கோ, தொழில்துறை வளர்ச்சிக்கோ எந்த வகையிலும் உதவாது. சேலம் பகுதியிலுள்ள தாது வளங்களை தனியார் ஆலைகள் போட்டியின்றி கொள்ளை அடிப்பதற்கே உதவும். மேலும், சேலம் ஆலையில் பணியாற்றும் 2000 தொழிலாளர்களையும் இந்த நடவடிக்கை பாதிக்கும். எனவே, சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஆலையை நவீனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் அமைச்சர்கள் குழுவும் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். இதற்குப் பிறகும் தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடர்ந்தால் அதற்கு எதிராக சேலம் பகுதியுள்ள மக்களையும், இரும்பாலை தொழிலாளர்களையும் திரட்டி மிகப்பெரிய அறவழிப் போராட்டத்தை பாமக நடத்தும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x