ஜெ. எதிர்த்து வந்த மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்?- வீரமணி

ஜெ. எதிர்த்து வந்த மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்?- வீரமணி
Updated on
4 min read

ஜெயலலிதா எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு இன்றைய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மிகவும் குறுகிய காலத்தில் பரபரப்பில்லாமல் மிகவும் அமைதியான முறையில் இரண்டு நடவடிக்கைகள் சமீப காலத்தில் நடந்துள்ளன. பல்வேறு மாநில அரசுகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துவரும் திட்டமான உதய் மின் திட்டத்திற்கு தமிழக அரசின் உடனடி ஒப்புதல், அதே போல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவா முதல்வர் லட்சுமிகாந்த பாரிக்கர் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோர் கடுமையாக எதிர்த்து வந்தனர். மம்தா இந்த திட்டத்தை நான் இருக்கும் வரை மேற்குவங்கத்தில் நடைபெற அனுமதிக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.

முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தாரே!

ஜெயலலிதா தான் மருத்துவமனைக்குச் செல்லும் வரை அவர் இந்த இரண்டு திட்டங்களையும் கடுமையாக எதிர்த்துவந்தார். தமிழக அரசு இதை கடுமையாக எதிர்க்க காரணம் மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்; மின் நிலையங்களுக்கு தடையில்லாமல், அதிக நிலக்கரி வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதேயாகும்.

முக்கியமாக உதய் திட்டத்தின் மூலம் எரிசக்தி துறை எளிமையாக்கம் என்ற பெயரில் தனியார் வங்கிகளிடம் மாநில அரசுகள் அதிக கடன் வாங்கவேண்டிய மறைமுக ஏற்பாட்டை மோடி அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது, மார்ச் 25, 2016 இல் புதுடில்லியில் ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எங்களுடைய மோசமான அரசியல் எதிரிகள் கூட உதய் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தவிர உதய் திட்டத்தை அம்மாநிலத்தில் அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லையென்றுதான் கருதுகிறேன் என்று கூறினார். அப்படி இருக்கும்பொழுது தமிழக அரசின் முடிவில் தலைகீழ் மாற்றம் வந்தது எப்படி?

தமிழக அரசு ஏற்கவேண்டிய நிதிச் சுமை

இத்திட்டத்தின் படி தமிழக மின் வாரியத்தின் 81 ஆயிரத்து 782 கோடி ரூபாய் கடனில் 65 ஆயிரத்து 320 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் தமிழக அரசு ஏற்க வேண்டியிருக்கும். மீதமுள்ள 16 ஆயிரத்து 462 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட வேண்டும். மேலும் வருங்காலத்தில் மின் வாரியம் எதிர்கொள்ளும் இழப்புகளையும், கடன் பத்திரங்களுக்கான வட்டியையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். இது சமாளிக்க முடியாத அளவுக்கான நிதி நெருக்கடி என்பதால் தமிழக அரசு எதிர்த்தது. மேலும் உதய் திட்டத்தின் படி ஒரு சில குறிப்பிட்ட தனியார் மின் உற்பத்தியாளர்களே பயன் பெறுவார்கள் .

ஆனால் திடீரென்று கடந்த 21 ஆம் தேதி டில்லியில் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உதய் திட்டத்தில் தமிழக அரசு சேர்வதற்கு மாநிலத்தின் சம்மதத்தைத் தெரிவித்தார். இந்த சந்திப்பே அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென்று தான் அமைச்சர் தங்கமணியின் டில்லிப் பயணம் நிகழ்ந்தது. வழக்கமாக இது போன்ற பயணங்கள் நன்கு திட்டமிடப்படும். ஆனால், அமைச்சர் தங்கமணியின் பயணம் இந்த முறை அவசர கதியில் நிகழ்ந்ததுதான் செப்படி வித்தை!

தமிழக அரசு இதற்கு முன்பு தான் எழுப்பிய எந்த ஆட்சேபணைகளுக்கும் என்ன பதில் மோடி அரசிடமிருந்து கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த வில்லை. உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் கூட இந்த சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட எதிர்ப்பு என்னாயிற்று?

இதே போன்று அக்டோபர் 27 ஆம் தேதி இரவு தமிழக தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் முழுவதிலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த திட்டத்தை 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு அவசர சட்டமாகக் கொண்டு வந்த காலத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா எதிர்த்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பின் அவரை முதன்முறையாக சந்தித்த போதும், ஆகஸ்ட் 7, (2015) இல் சென்னையில் முதல்வரை அவரது போயஸ் தோட்ட வீட்டில் மோடி சந்தித்த போதும், இந்தாண்டு மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் ஜூன் 14 ஆம் தேதி மோடியை டில்லியில் சந்தித்த போதும் முதல்வர் கொடுத்த கோரிக்கை மனுக்களில் இந்த விஷயம் முக்கியமாக இடம் பெற்றிருந்தது. குறிப்பாக கடைசியாக மோடியிடம் கொடுத்த மனுவில் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

இதில் முக்கியமாக இந்த சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து முதல் மூன்றாண்டுகளுக்கு மட்டுமே மானிய விலையில் மத்திய அரசு உணவுப் பொருட்களை மாநிலங்களுக்கு வழங்கும் என்று இருப்பதை 10 ஆண்டுகளுக்கு என்று மாற்ற வேண்டும் என்பதாகும்.

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை முழுவதுமாக சரி பார்க்கும் வேலைகளும், பயனாளிகளின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் சேர்க்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தால் மட்டுமே உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முடியும். எனவே காலக்கெடு வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இந்த கோரிக்கைகள் என்னவாயின என்று தெரிவிக்கப்படவில்லை. இதுதவிர தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் தமிழகத்திற்கு கூடுதலாக 1,193.30 கோடி ரூபாய் செலவாகும் என்று அக்டோபர் 27 ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உதய் திட்டத்தில் வரும் கடன் நெருக்கடியுடன் சேர்த்து, இந்தக் கடன் நெருக்கடியும் ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாலரை லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு சகிக்கவே முடியாத கூடுதல் சுமைதான் இது! இந்தச் சுமையை தமிழகம் எப்படி சமாளிக்கப் போகிறது என்பதற்கான எந்த விளக்கத்தையும் தமிழக அரசு இதுவரையில் தெரிவிக்கவில்லை.

இந்த முடிவுகள் மாநில அமைச்சரவையின் முடிவுகள் என்று சொல்லப்பட்டாலும் இதற்கு முன்பு தமிழக அரசே கடுமையாக எதிர்த்த நிலைப்பாடு என்னவாயிற்று? தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு மோடி தலைமையினாலான அமைச்சரவை ஏதாவது விளக்கம் அளித்துள்ளதா? அப்படி ஒன்றுமே இல்லாத பட்சத்தில், தமிழக அரசை மேலும் நிதிச்சுமை மற்றும் தனியார் மயத்திற்குத் தள்ளவேண்டிய கட்டாய சூழலை உருவாக்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி கொடுத்து அதை உடனே அமலுக்குக் கொண்டுவந்தது ஏன்?

நீட் தேர்வுக்கு ஒப்புதலா?

சமீபத்தில் கல்விக்கொள்கை பற்றி டில்லியில் பேசிவிட்டுத் திரும்பிய கல்வித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நல்ல பல கருத்துகளை எடுத்துரைத்தார் என்று அனைவரும் பாராட்டினர். ஆனால், அவர் பேச்சில் ஒன்றை நமது ஊடகங்கள் கோடிட்டுக் காட்டவில்லை. அதாவது நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தும் என்று அதிர்ச்சி அறிவிப்பை வெளியிடுகிறார்.

நுழைவுத் தேர்வினை முதல்வர் ஜெயலலிதா தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார். ஏன் நுழைவுத் தேர்வு கூடாது என்று சட்டம் கூட அவர் ஆட்சியின்போது இயற்றப்பட்டதுண்டு - நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அது தள்ளுபடி செய்யப்பட்டாலும், கருணாநிதி தலைமையிலான ஆட்சியின்போது முறையாக சட்டம் இயற்றப்பட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது (2007). அதுமுதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது என்பது முக்கியமான - உறுதியான செய்தியாகும்.

தலைகீழாக இத்தகைய முடிவுகள் மாறியதற்கு என்ன காரணம்? முதல்வர் உடல்நிலையினால் ஏற்பட்டிருக்கும் சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிர்ப்பந்தம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் அடிபடுவதை புறக்கணித்துவிட முடியாதே!

தமிழகத்தில் அத்தனை எதிர்கட்சித் தலைவர்களும் ஒருசேர நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்கும் போது கல்வி அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தமிழக அரசு பயிற்சி வகுப்புகளை நடத்தும் என்று கூறியதன் பின்னணியில் மோடி அரசு செயல்படுகிறது என்றே கருத வேண்டியுள்ளது.

முதல்வர் உடல்நலம் பாதிக்கப்பட்ட இந்நிலையில், தமிழக அமைச்சர்களின் போக்கின் மூலம் மெல்ல மெல்ல தமிழக அதிகாரம் மோடியின் கைகளுக்குச் சென்று கொண்டு இருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலை இல்லை என்று செயல்பாடுகள்மூலம் காட்டவேண்டிய கட்டாய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது'' என்று வீரமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in