திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

திருக்குறள் புத்தகம் விற்று ரூ.65 கோடி மோசடி: வழக்கை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மதுரையில் திருக்குறள் புத்தகம் விற்பனைத் திட்டத்தில் ரூ.65.46 கோடி மோசடி செய்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் பாரா மவுண்ட் கார்ப்பரேஷன் என்ற பெயரில் 2010-ல் தனியார் நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனம் 100 திருக்குறள் புத்தகங்களை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கினால், 37-வது மாத முடிவில் ரூ.46,900 முதிர்வுத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்பி ஏராளமானோர் திருக்குறள் புத்தக திட்டத்தில் பணம் முதலீடு செய்தனர்.

இத்திட்டத்தில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.65.46 கோடி வரை பணம் திரட்டப்பட்டது. ஆனால் அறிவித்தபடி பணம் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்கவில்லை. இதுதொடர்பாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பலரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை பொருளாதார முதலீட்டு குற்றங்களுக்கான சிறப்பு (டான்பிட்) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பாராமவுண்ட் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க டான்பிட் நீதிமன்றத்துக்கு கடந்தாண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவு அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை, வேண்டும் என்றே விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர் என உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு முதலீட்டாளர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி தெரிவித்தனர்.

மாதந்தோறும் அறிக்கை: இதையடுத்து நீதிபதி, திருக்குறள் புத்தக மோசடி வழக்கை டான்பிட் நீதிமன்றம் தினமும் விசாரித்து 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். அரசு தரப்பில் ஒவ்வொரு விசாரணையின் போதும் சாட்சிகளை ஆஜர்படுத்த வேண்டும். விசாரணையின் நிலை குறித்து மாதம்தோறும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in