

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாட்கோ அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்த தாட்கோ தலைவர் மதிவாணன், பயனாளிகளுக்கு டிராக்டர், வாடகை கார், ஆட்டோ, சுற்றுலா போன்ற வாகனங்கள் வாங்கவும் கடைகள் தொடங்குவதற்கும் 14 பயனாளிகளுக்கு ரூ.22.87 லட்சம் மானியத்தில் ரூ.77.23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல விடுதியை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரின் விடுதி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டோம்.
6 அலுவலகங்கள் திறப்பு: கட்டிப் பணிக்காக தமிழகம் முழுவதும் கடந்தாண்டு ரூ.200 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு ரூ.219 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடவேண்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.20 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டிடங்கள், விடுதிகளை வரும் 2-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் தாட்கோ மேலாளர் அலுவலகங்களையும் முதல்வர் திறக்க உள்ளார் என்றார். இந்த ஆய்வின்போது எம்எல்ஏக்கள் க.சுந்தர், சிவிஎம்பி எழிலரசன் உடன் இருந்தனர்.