Published : 01 Nov 2022 06:59 AM
Last Updated : 01 Nov 2022 06:59 AM

அனுமந்தபுரத்தில் மேலும் 3 வெடி பொருள் மீட்பு - மலைப்பகுதி அருகே போலீஸ் பாதுகாப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி முகாமையொட்டி உள்ள பகுதியில் ஏற்கெனவே வெடிக்காத மூன்று ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், மேலும் மூன்று வெடி பொருட்களை நேற்று போலீஸார் கைப்பற்றியுள்ளதால், போலீஸார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் 2 அல்லது 3 முறை ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இப்பயிற்சின்போது, சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் கொண்டு ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இதில், பயிற்சியின்போது வெடிக்காத வெடிபொருட்களை தேடி கண்டுபிடித்து கொண்டு செல்வது வழக்கம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இந்த முறையில் பயிற்சி மேற்கொண்டபோது வெடிக்காமல் இருந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களை, கடந்த இ்ரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மறைமலை நகர் போலீஸார் கைப்பற்றினர். மேலும், கைப்பற்றப்பட்ட ராக்கெட் லாஞ்சர் வெடிப் பொருட்களை அப்பகுதியிலேயே பள்ளம் தோண்டி அதனுள் வைத்து, சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் கால்நடைகள், பொதுமக்கள் உட்படயாரும் செல்லாதவாறு போலீஸார்பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இரும்புப் பொருள் என நினைத்து..: இந்நிலையில், அதேபகுதியில் வெடித்தும், வெடிக்காத நிலையில் ராக்கெட் லாஞ்சர் அல்லாத வேறு ரகத்தைச் சேர்ந்த 3 சக்தி வாய்ந்த வெடிப் பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும், பயிற்சி மையம் செயல்பட்ட பகுதியில் உள்ள மலையை சுற்றிலும் இதுபோன்று பல்வேறு வெடிபொருட்கள் சிதறி கிடக்கக் கூடும் எனத் தெரிகிறது. இதனால், ராக்கெட் லாஞ் சர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அபாயகரமானது என அறிவித்து, விளம்பர பலகை அமைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு இந்தபயிற்சி மையத்தில், பயிற்சியின்போது வெடிக்காமல் இருந்த வெடி பொருளை அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கண்டெடுத்தார். இரும்புப் பொருள் என நினைத்து அதை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் வெடித்து சிதறியது.

கால்நடைகளுக்கு பாதுகாப்பு: இதில், சாலையோரம் நின்றிருந்த ஒருவர் காயமடைந்தார். தற்போது, மீண்டும் அப்பகுதியில் வெடி பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு, ஆபத்தான அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x