

சென்னை: குஜராத் மாநிலம் மோர்பி நகரில்உள்ள மச்சூ ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் உடைந்து விழுந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம்விபத்துக்குள்ளானதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: குஜராத் மாநிலம் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் அப்பாவி உயிர்கள் பறிபோயிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பேரிழப்பை சந்தித்துள்ள குஜராத் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும், பலரின் உயிரைக் காப்பாற்றப் போராடிய தேசிய பேரிடர் மீட்புக் குழுக்களுக்கு நன்றி.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: குஜராத் விபத்தில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலியான செய்தி மிகுந்தவருத்தம் அளிக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: குஜராத் தொங்கு பாலம்7 மாத பராமரிப்புப் பணிகளுக்குப் பிறகு, கடந்த 26-ம் தேதிதான் திறக்கப்பட்டது. அடுத்த 4 நாட்களில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் உருவாக்கப்படுவதையும், அவை முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: குஜராத்தில் நேரிட்டுள்ள துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு குஜராத் மாநிலஅரசு உரிய கருணைத் தொகைஅளிப்பதுடன், காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காயமடைந்தவர்கள் உயர்தரமருத்துவ சிகிச்சை பெற்று, விரைவில் குணமடைய வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவித்தொகை வழங்குவதுடன், இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: நெஞ்சை உறையவைக்கும் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வி.கே.சசிகலா: இந்த விபத்தில் 500-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்ததாக வரும் செய்தி மிகவும் கவலை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.