

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில், தனது வார்டில் பணிகள் எதுவும் நடக்கவில்லை என திமுக கவுன்சிலர் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து தனது இருக்கையில் இருந்து இறங்கி வந்த மேயர் நாகரத்தினம், கவுன்சிலருக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் சு.நாகரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது. துணைமேயர் வி.செல்வராஜ், ஆணையர் க.சிவகுமார் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், 8-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி கே.தர் பேசும்போது, ‘தான் கவுன்சிலராக பதவியேற்று 6 மாதங்கள் முடிந்து விட்டன. எனது வார்டில் சாலை வசதி உட்பட எந்த வசதியும் ஏற்படுத்தப்படவில்லை’ என்றார்.
இதற்கு பதில் அளித்த மேயர் சு.நாகரத்தினம், ‘நிதி பற்றாக்குறை காரணமாக பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. கவுன்சிலர்கள் பொறுமை காக்க வேண்டும்’ என்றார். ஆனால், திமுக கவுன்சிலர் ஆதி தர் அதனை ஏற்காமல், தனது வார்டில் பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி நடக்கும் நிலையில், இதுபோன்று குற்றம் சுமத்தக்கூடாது என பிற கவுன்சிலர்கள் அவரை அமைதிப்படுத்த முயன்றனர்.
இருப்பினும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தபடியே இருந்தார். இதனால் கோபமடைந்த மேயர் சு.நாகரத்தினம், தனது இருக்கையில் இருந்து எழுந்து, கவுன்சிலரின் இருக்கைக்கு முன்பு வந்து, ‘நீங்கள் திமுக கவுன்சிலரா அல்லது எதிர்க்கட்சி கவுன்சிலரா? தேவையில்லாமல் விளம்பரம் தேடுகிறீர்கள்’ என்றார்.
மண்டல தலைவர்களும், கவுன்சிலர்களும் மேயரை சமாதானப்படுத்தி இருக்கைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.
ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டையும், நான்கு பகுதி சபாவாகப் பிரித்து , ஒவ்வொரு சபாவிற்கும் பிரதிநிதி நியமித்தல், மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி அளித்தல், குடிநீர் விநியோகம், ஓட்டுநர் பணி, டெங்கு தடுப்புப் பணிக்கு தினக்கூலி அடிப்படையில் பணியாளர் நியமனம் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.