

வேந்தர் மூவிஸ் மதனின் சொத்துகளை பறிமுதல் செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 29-ம் தேதி தலைமறைவானார். மருத்துவக் கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக மதன் மீது 123 பேர் போலீஸில் புகார் கொடுத்தனர். அவர் மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் திருப்பூரில், தனது தோழியான வர்ஷா என்ற வர்ஷினியின் வீட்டில் ரகசிய அறையில் பதுங்கியிருந்த மதனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தனிப்படை அதிகாரிகள் கூறியதாவது:
மதனுக்கு தோழிகள் அதிகம் என்பதால் அவரது செல்போன் எண்ணை வைத்து தோழிகளை பட்டியலிட்டோம். அதில் கீதாஞ்சலி என்பவர் முதலில் சிக்கினார். இவர்தான் மதனுக்கு பல பெண்களை அறிமுகப்படுத்தியவர். அந்தப் பெண்களுடன் கோவா மற்றும் பெங்களூரில் அவர் 2 மாதம் தங்கியிருந்துள்ளார். கீதாஞ்சலியின் உதவியாளர் சேகர் என்பவரை பிடித்து விசாரித்ததை தெரிந்து கொண்ட மதன், கீதாஞ்சலியுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
பின்னர் மெர்ஷியா என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு மணிப்பூர் உட்பட பல இடங்களில் சுற்றியுள்ளார். பின்னர் மதனின் மனைவி உறவுப் பெண்ணான வர்ஷா என்பவர், திருப்பூரில் தங்கியிருப்பது தெரியவந்தது. மதனுக்கும், வர்ஷாவுக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றியுள்ளனர். இந்நிலையில் வர்ஷாவை மணிப்பூருக்கு வரவழைத்து அங்கே இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர். அப்போது வர்ஷா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மதனிடம் வற்புறுத்த, இருவரும் மோதிரம் மாற்றியுள்ளனர்.
பின்னர் வர்ஷாவுக்கு திருப்பூரில் பங்களா மற்றும் கார்களை மதன் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வீட்டில் ரகசிய அறையை கட்டி, அதில் மறைந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் கீதாஞ்சலியின் செல்போனில் இருந்து ‘எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டு மதனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினோம். உடனே அதில் மணிப்பூரில் தான் இருப்பதாக மதன் பதில் அனுப்பினார். ஆனால் அவரது செல்போன் எண்ணின் சிக்னல் திருப்பூரை காட்டியது. எனவே வர்ஷாவின் வீட்டில்தான் மதன் இருக்கிறார் என்ற சந்தேகம் வலுப்பெற்றது.
வர்ஷாவை தவிர வேறொரு நபரும் அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்துகொண்டு, அதிகாலையில் அந்த வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்தோம், அப்போது வர்ஷா மட்டுமே இருந்தார். ஆனால் மதன் பயன்படுத்திய செல்போன் வர்ஷாவின் படுக்கை அறையில் இருந்ததை கண்டுபிடித்தோம்.
அதை வைத்து வர்ஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்த, ஒரு கட்டத்தில் வீட்டிலுள்ள ரகசிய அறையில் மதன் மறைந்திருப்பதை அவர் தெரிவித்தார். அந்த அறையை நாங்கள் திறக்க முயன்றபோது, மதன் உட்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் அந்த அறையை உடைத்து மதனை பிடித்தோம்.
மதனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் பெயரில் ஏராளமான சொத்துகளை அவர் வாங்கியுள்ளார். மேலும் தலைமறைவாக சுற்றிய இடங்களிலும் வீடுகள், கார்கள் வாங்கியுள்ளார். பெண்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். மதனின் சொத்துகள் குறித்த விவரங்களை கணக்கெடுத்து வருகிறோம். அவற்றை பறிமுதல் செய்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு தனிப்படை அதிகாரிகள் கூறினர்.
மதனிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் போலீஸார் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது.