

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே படைவீடு ஊராட்சி சாமந்திபுரம் கிராமத்தில் உள்ள நட்சத்திர குன்றில் முருகர் கோயில் உள்ளது. முருகர் கோயிலில் நடைபெறும் வழிபாட்டில் கிராம மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நட்சத்திர குன்றில் வளர்ந்துள்ள அரிய வகை மரங்கள் கடந்த சில மாதங்களாக வெட்டி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கூறும்போது, “நட்சத்திர குன்றில் வளர்ந்துள்ள பல அரிய வகை மரங்களை தேடி, வெளியூர்களில் இருந்து எண்ணற்ற பறவைகள் வந்து செல்கிறது.
மேலும் பல பறவைகளின் வாழ்விடமாகவும் உள்ளது. பறவைகள் மற்றும் வன உயிரினங்கள் மட்டுமின்றி, கிராம மக்களின் வாழ்வுக்கும் மரங்கள் முக்கியமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அரிய வகை மரங்களை சமூக விரோத கும்பல் வெட்டி கடத்தி வருகிறது.
அவர்களது நடமாட்டம் இரவு நேரத்தில் உள்ளது. நட்சத்திர குன்றின் மீது உள்ள அரிய வகை மரங்களை வெட்டி கடத்தும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். நட்சத்திர குன்றை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.