Published : 31 Oct 2022 07:10 PM
Last Updated : 31 Oct 2022 07:10 PM

“அண்ணாமலைக்கு விளம்பரமேனியா” - திருமாவளவன் விமர்சனம்

கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அருகில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

கடலூர்: “ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா உள்ளது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி விமர்சித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு வந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி இன்று (அக்.31) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் குஜராத் அரசும், மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆளுநரே ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்.

ஆன்மிகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார். மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. சிலிண்டர் விபத்து தொடர்பாக உளவுத்துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை என்று அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பாஜகவினர் இது போன்று பேசி வருகின்றனர். இதற்காக பாஜகவை கடுமையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கின்றது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கின்றது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா உள்ளது. தனிநபர் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரிகமானது. ‌அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். காசுகொடுத்து கூட்டம் கூட்டி பாஜக கூட்டம் போட்டு போய் உள்ளனர்.

கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்தியை மத்திய அரசு திணிக்கிறது. ஆங்கிலத்தை யார் திணிப்பது? பாஜக சொல்வது வேடிக்கையாக உள்ளது. இந்தி திணிப்பு என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றிவிட்டனர். 70 சதவீதம் மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். அதிகம் இந்தி உள்ள மாநிலங்களில் இம்முடிவு எடுக்கலாம்.மற்ற மாநிலங்களில் இதை திணிப்பதை ஏற்கமுடியாது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து எனது தலைமையில் நாளை ( நவ.1)) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது” இவ்வாறு கூறினார்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x