Published : 31 Oct 2022 12:24 PM
Last Updated : 31 Oct 2022 12:24 PM

'பாஜக எந்த மதத்தினருக்கும் எதிரான கட்சி கிடையாது' - அண்ணாமலை

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

கோவை:"சனாதன தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த ஒரு மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என்று வேறுபடுத்தி பார்த்தாலே சனாதன தர்மத்துக்கு எதிரானது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. இங்கு இருக்கும் இஸ்லாமிய பெரியவர்கள்கூட 23-ம் தேதிக்குப் பிறகு மிக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றனர்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " இந்த விபத்து நடந்தபிறகு, அது வெடிகுண்டு என்று தெரிந்தபிறகு அது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று தெரிந்தபிறகு மிக துணிவாக காவல்துறையினர் இந்த இடத்தை எல்லாம் அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த குற்றத்தில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்தி வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் இதனுடைய துணை தாக்குதல் எதுவும் நடக்காத வண்ணம், தங்கள் உயிரை பணையம் வைத்து கோவை போலீஸார் பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சதிகாரர்கள் நம்மை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்று மதத்தால் பிளவுபடுத்த பார்ததால்கூட கோவை மக்கள் ஒன்றாக இருக்கிறார்கள். அது மிகப்பெரிய விஷயம். இதுபோன்ற தாக்குதல் மூலமாக மதத்தை வைத்து கோவையைப் பிரித்து சூழ்ச்சி செய்து அதன்மூலமாக மக்களிடம் ஒற்றுமை உணர்வை குறைப்பதற்காகத்தான் இந்த முயற்சி. ஆனால், சம்பந்தப்பட்டவர்களை முதல் நாளில் இருந்து பாஜக குற்றவாளி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதமான மதசாயத்தையும் பூசவில்லை.

இந்த சனாதன தர்மத்தின் அற்புதம் என்னவென்றால், எந்த ஒரு மனிதனையும் வேற்றுமைப்படுத்தி பார்க்கக்கூடாது. இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர் என்று வேறுபடுத்தி பார்த்தாலே சனாதன தர்மத்துக்கு எதிரானது. அனைவரையும் அரவணைக்கக்கூடிய கடமை நமக்கு இருக்கிறது. இங்கு இருக்கும் இஸ்லாமிய பெரியவர்கள்கூட 23-ம் தேதிக்குப் பிறகு மிக நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றனர்.

கோவையில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்கூட வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடாது. அது மிகமிக தவறான முன் உதாரணம். எனவே மதகுருமார்கள், இளைஞர்கள் யாராவது தவறான வழியில் சென்றால் சொல்வது நம்முடைய கடமை. அடிப்படையில் அனைத்து மதங்களும்கூட, அமைதியை, ஆன்மிகத்தை தான் சொல்லுகிறது. எனவே எந்தவொரு மதத்திற்கும் பாஜகவோ, பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ எதிரானவர்கள் கிடையாது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x