Published : 19 Nov 2016 08:32 PM
Last Updated : 19 Nov 2016 08:32 PM

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும்: கி.வீரமணி

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 17-ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இருவர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு மீன்பிடித் தொழில் தவிர வேறு வாழ்வாதாரம் இல்லை.

இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி, படகுகள், வலைகளை பறித்து வருகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அண்மையில் தமிழக - இலங்கை மீனவர்களுக்கு இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. எனவே, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்.பி.க்களையும் அழைத்துக் கொண்டு அதிமுக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும்'' என்று வீரமணி கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x