

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.
கோவையில் சமரச தீர்ப்பாயம் குறித்து கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்ட நீதிபதிகள் கலந்துகொண்ட கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கடந்த 2 ஆண்டுகளில் நிறைய புதிய சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. பணிப் பெண்கள் பாதுகாப்பு, பாலியல் பலாத்காரம், காசோலை மோசடி ஆகியவற்றில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
தற்போது, நீதிமன்றங்களில் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித் துள்ளன. எல்லா வழக்குகளையும் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பது சிரமமான ஒன்று. நஷ்டஈடு, ஜீவனாம்சம், இழப்பீடு போன்ற வழக்குகளில் சமரசமாகப் பேசி தீர்த்துக் கொள்ள 6 மாதத்துக்கு இருமுறை மக்கள் தீர்ப்பாயம் நடத்தப்படுகிறது. இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் தேங்கிக் கிடந்த எண்ணற்ற வழக்குகள் சுமுகமாக முடிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் போட்டி யிடுவது குறித்து கேட்கிறார்கள். குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது. நீதிமன்ற விசாரணை, தண்டனை, மேல்முறையீடு போன்றவை உள்ளன. எனவே, நேரடியாக எடுத்தவுடன் குற்றவாளி என நீங்கள் (ஊடகங்கள்) குறிப்பிட வேண்டாம்.
வரும் ஏப்ரல் 25-ம் தேதியுடன் நான் பணி ஓய்வு பெறுகிறேன். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து வழக்கின் மீதான தீர்ப்பு ஒரு வாரத்தில் தெரிவிக்கப்படும். அதுவரை பொறுத்திருங்கள். இவ்வாறு சதாசிவம் கூறினார்.