

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேறுகால அவசர சிகிச்சை மைய கட்டிடம் முன்பு தேங்கியுள்ள மழைநீரில், கொசுக்கள் உற்பத்தியாகி, சிகிச்சையில் உள்ள கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் கொசுத் தொல்லையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் கூடிய பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை மையத்தை, கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைத்தார். இங்கு திருவாரூர் மட்டுமின்றி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகளும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்குள்ள சிசு தீவிர சிகிச்சை மையத்தில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி, வெளி மருத்துவமனைகளில் இருந்தும் அவசர சிகிச்சைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் செயல்படும் பேறுகால அவசர சிகிச்சை மைய கட்டிடம் முன்பு, கடந்த ஒரு மாதமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உதவியாக வருவோர், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என அனைவரும் குறுகிய பாதை வழியாகவோ அல்லது மழைநீரில் இறங்கியோ சிகிச்சைப் பிரிவுக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், கடந்த ஒரு மாதமாக மழைநீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, சிகிச்சையில் உள்ள கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கொசுத் தொல்லையால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பேறுகால அவசர சிகிச்சை மைய கட்டிடம் முன்பு தேங்கியுள்ள மழைநீரை வடியச் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், இனி அங்கு மழைநீர் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண் கூறும்போது, ‘‘பிறந்த குழந்தையை கொசுத் தொல்லையில் இருந்து பாதுகாப்பது பெரிய வேலையாக இருந்தது. அந்தளவுக்கு கொசுத் தொல்லை இருந்தது. எனவே, பேறுகால அவசர சிகிச்சை மைய கட்டிடம் முன்பு மழைநீர் தேங்காமல், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, அங்கு சிமென்ட் தளம் அமைக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து மருத்துவமனை அலுவலர்கள் கூறும்போது, ‘‘பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசனை செய்து, பேறுகால அவசர சிகிச்சை மைய கட்டிடத்தை சுற்றி சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.