

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக நெய் காணிக்கை சிறப்பு கவுன்டர் தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவம்பர் 24-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு தொடர்ந்து காணலாம். இதற்காக, சுமார் 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
மகா தீப நெய் காணிக்கையை, காலம் காலமாக பக்தர்கள் வழங்கி வருகின்றனர். இதற்காக, அண்ணாமலையார் கோயிலில் அமைக்கப்படும் சிறப்பு கவுண்டர்களில் நெய் காணிக்கைக்கான தொகையை பக்தர்கள் செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டும் நெய் காணிக்கைக்கான சிறப்பு கவுன்டர், அண்ணாமலையார் கோயிலில் உள்ள இணை ஆணையர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ நெய் விலை - ரூ.250, 500 கிராம் நெய் விலை ரூ.150 மற்றும் 250 கிராம் நெய் விலை ரூ.80 என நிர்ணயிக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை தொகை பெறப்படுகிறது. நெய் காணிக்கை தொகையை வழங்கும் பக்தர்களுக்கு டோக்கன் கொடுக்கப்படுகிறது. இந்த டோக்கனை கொடுத்து, ஆருத்ரா தரிசனத்துக்குப் பிறகு, ‘தீப மை’ பிரசாதத்தை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். மேலும், http://annamalaiyar.hrce.tn.gov.inஎன்ற கோயில் இணையதளத்திலும், நெய் காணிக்கை தொகையை செலுத்தலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.