மதுரையில் 5 கி.மீ. நீளம்கொண்ட புதிய பறக்கும் பாலம் - விரைவில் அமைய உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல்

சிதலமடைந்த பாலம்
சிதலமடைந்த பாலம்
Updated on
1 min read

மதுரை: மதுரை தெற்கு வாசல் பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில், அதன் அருகே நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை 5 கி.மீ தொலைவிற்கு மற்றொரு பாலம் அமைப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை தெற்குவாசல் - வில்லாபுரம் சாலையில் ரயில்வே வழித்தடத்தை கடப்பதற்காக தெற்கு வாசல் மேம்பாலம் உள்ளது. இந்த பாலம், 1989ம் ஆண்டு 500 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி இந்த பாலத்தை திறந்து வைத்தார்.

இந்த பாலம் இரு வழித்தடத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்பட்டது. தற்போது இந்த பாலத்தில் பீக் அவரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பாலம் குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பாலத்தை அகலப்படுத்த நில ஆர்ஜிதம் செய்ய வசதியில்லாததால் ஈரடுக்கு பாலமாக மாற்றி அமைக்கப்படும் என கடந்த அதிமுக ஆட்சியின்போது கூறப்பட்டது. எனினும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாலம் விரைவில் பராமரிக்கப்பட உள்ளது. பாலத்தின் உயரத்தை உயர்த்த வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டதால், பாலத்தை உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலம் வலுவாக இருப்பதால், அதனை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் திட்டம் இல்லை. எனினும், பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அதன் அருகிலேயே நில ஆர்ஜிதம் செய்து மற்றொரு பாலம் அமைக்கும் திட்டம் உள்ளது. இந்த புதிய பாலம் நெல்பேட்டையில் இருந்து ஆரம்பித்து அவனியாபுரம் வரை 5.கி.மீ. தூரம் கொண்டதாக இருக்கும். இந்த பாலம் அமைக்கப்பட்ட பிறகு இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. புதிய பாலத்திற்கான ஆய்வுகள், ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in