Published : 30 Oct 2022 10:17 AM
Last Updated : 30 Oct 2022 10:17 AM
சென்னை: டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த வேணு சீனிவாசனின் நற்பெயருக்கோ, அவரது மதிப்பு, மரியாதைக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இனி அவதூறு பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து தாக்கல் செய்த பதில் மனுவை ஏற்ற நீதிபதிகள், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
‘சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் புன்னைவன நாதர் சன்னதியில் லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் வகையில் அலகில் மலர்களுடன் கூடிய மயில் சிலை இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவுக்கு பிறகு, அந்த மயில் சிலை மாயமாகிவிட்டது. தற்போது பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது’ என சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக கோயில் திருப்பணி குழுவினர், அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2018-ல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ‘மலர்களுடன் கூடிய மயில் சிலையை மாற்றிவிட்டு, பாம்புடன் உள்ள மயில் சிலையை வைத்தது ஆகம விதிக்கு முரணானது. எனவே மலர்களுடன் கூடிய மயில் சிலையை பிரதிஷ்டை செய்துபாலாலயம் செய்ய வேண்டும். சிலை மாயமானது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை விரைவாக விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த வேணு சீனிவாசன் மீதும் அதில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த செப்.2-ம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘‘மயிலாப்பூர் கோயில் மயில் சிலையில் இருந்தது மலரா, பாம்பா என்று கோயில் ஆகமக் குழு விரைவில் முடிவு செய்யும். ஒருவேளை அதுமலர் என்பது தெரியவந்தால், தற்போது பாம்புடன் கூடிய சிலையை மாற்றியமைக்க வேண்டும். இதில் இருதரப்பும் தங்கள் நற்பெயர், சமூக மதிப்பு, மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் வலைதளங்களில் விரும்பத்தகாத பதிவுகளை பதிவு செய்யக் கூடாது. பொது வெளியில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டக் கூடாது’’ என உத்தரவிட்டு, அந்த வழக்கை முடித்துவைத்தது.
இந்நிலையில், சிலை மாயமான விவகாரத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ரங்கராஜன் நரசிம்மன் ட்விட்டரில் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி டிவிஎஸ் குழுமத்தின் வேணு சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.மாலா அமர்வில்இந்த வழக்கு கடந்த அக்.12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வேணு சீனிவாசன்தரப்பில் மூத்த வழக்கறிஞர்பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘‘இதுதொடர்பாகஎந்தவொரு பதிவுகளையும் போடக்கூடாதுஎன நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்,ரங்கராஜன் நரசிம்மன் வேண்டுமென்றே ட்விட்டரில் வேணு சீனிவாசன் குறித்து அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதை ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக மன்னிப்பு கோரி ரங்கராஜன் நரசிம்மன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, இந்த வழக்கு கடந்த அக்.18-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘வேணுசீனிவாசனின் நற்பெயருக்கோ, அவரதுமதிப்பு, மரியாதைக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் இனி சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ய மாட்டேன். இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். ஏற்கெனவே ட்விட்டரில் பதிவிட்டதையும் நீக்கிவிடுகிறேன்’’ என்று உத்தரவாதம் அளித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வேணு சீனிவாசன் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
பாரம்பரியமிக்க டிவிஎஸ் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபரான வேணு சீனிவாசன் தனதுபொது வாழ்க்கை, தொழில்துறை, ஆன்மிக சேவைகளுக்காக மத்திய அரசின் உயரிய ‘பத்ம பூஷன்’ விருது பெற்றவர். தனது அறக்கட்டளை மூலமாக கோடிக்கணக்கில் செலவிட்டு, நாடு முழுவதிலும் 200-க்கும் மேற்பட்ட கோயில்களை சீரமைத்துள்ள இவரை ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுஇயக்குநராக சமீபத்தில் நியமித்து மத்தியஅரசு கவுரவப்படுத்தியுள்ளது. கடந்த 2012 முதல் 2021 வரை ரங்கம் கோயில் அறங்காவலர் குழு தலைவராக இருந்த வேணு சீனிவாசன், பக்தர்கள் மற்றும் கோயில் நலன் சார்ந்து கோயிலில் பல்வேறு ஆக்கப்பூர்வமான சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது ஆன்மிக சேவைகளை குடியரசு துணைத் தலைவரும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
நீதிமன்றத்தில் தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள ரங்கராஜன் நரசிம்மன், ஆரம்பம் முதலே வேணு சீனிவாசனை கடுமையான வார்த்தைகளால் சமூக ஊடகங்களில் விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
வேணு சீனிவாசன் மீது நல்லெண்ணம் கொண்டவர்கள், ரங்கராஜன் நரசிம்மனின் தொடர் விமர்சனங்களால் மனம் புண்பட்டு வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால் அத்தகையவீண் விமர்சனங்களுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நம்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT