Published : 30 Oct 2022 04:45 AM
Last Updated : 30 Oct 2022 04:45 AM

தேவகோட்டை அருகே தேனாற்றில் வெள்ளம்: சேதமடைந்த தரைப்பாலத்தால் கிராம மக்கள் அச்சம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே சேதமடைந்த தேனாறு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் கிராம மக்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சிறுவாச்சியிலிருந்து நெட்டேந்தல் வழியாக வெங்களூர் செல்லும் சாலையில் நெட்டேந்தல் விலக்கு பகுதியில் குறுக்கே தேனாறு செல்கிறது. இப்பகுதியில் சாலையை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த தரைப்பாலத்தை கடந்துதான் நெட்டேந்தல், பூங்குடியேந்தல், கூனாவயல், வண்ணவயல், வெங்களூர் பகுதி மக்கள் கண்ணங்குடி, தேவகோட்டை செல்கின்றனர். அதேபோல் கண்ணங்குடி, சிறுவாச்சி மக்கள் இச்சாலை வழியாக புதுவயல், காரைக்குடிக்கு செல்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் சேதமடைந்தது. பாலத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்காலிக ஏற்பாடாக கிராம மக்களே ஜல்லிக்கற்கள் கொண்ட மூட்டைகளை பாலத்தில் ஏற்பட்ட பள்ளங்களில் அடுக்கி வைத்திருந்தனர்.

தற்போது தேனாற்றில் வெள்ளநீர் செல்வதால் மீண்டும் பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலமும் அடித்து செல்லப்படும் நிலையில் உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆற்றில் செல்லும் நீரின் வேகத்தை கட்டுப்படுத்த அருகேயுள்ள கண்மாய்க்குத் தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர்.

பருவமழை தீவரமடையும்போது தேனாற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைய வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து நெட்டனேந்தலைச் சேர்ந்த செல்லத்துரை கூறியதாவது: தரைப்பாலம் முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. தண்ணீர் செல்லாதபோது பள்ளங்களை கவனித்து வாகனங்களில் சென்று வந்தோம். மேலும் பள்ளங்களில் ஜல்லிக்கற்கள் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தோம். அவை தற்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

இதனால் பாலத்தை கடப்பதற்கு சிரமமாக உள்ளது. சிலதினங்களுக்கு முன்பு பள்ளி மாணவி கீழே விழுந்து காயமடைந்தார். எனவே, பாலத்தை உடனடியாக சீரமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x