

ஐநூறும்.. ஆயிரமும்.. உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற உதவி மேலாளர் எம்.ராஜ்குமார் தரும் பதில்கள் இங்கே..
காப்பீட்டு பணத்துக்கு வரி வருமா?
என் தந்தையின் விபத்துக் காப்பீட்டு பணம் ரூ.4 லட்சம் விரைவில் வரவிருக்கிறது. அதை வங்கியில் செலுத்தினால் ஏதேனும் வரி கட்ட வேண்டுமா?
- பாலகுமார், நாமக்கல்
காப்பீட்டில் இழப்பீடாக வழங்கப்படும் தொகைக்கு வருமான வரி இல்லை.
பால் பண்ணை வருமானத்துக்கு வரி உள்ளதா?
நாங்கள் நடத்தும் பால் பண்ணையில் செலவெல்லாம் போக ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் மிச்சமாகிறது. இதற்கு விவசாயத்துக்கான வரி விலக்கு உண்டா?
- சிவராமசாமி, கோயம்புத்தூர்
பால் பண்ணை விவசாயம் சார்ந்த தொழிலாக (Allied activities of Agriculture) இருந்தாலும் அதன் வருமானத்துக்கு வரி உண்டு. எனினும், செலவு போக மீதமுள்ள தொகை ரூ.2.4 லட்சத்துக்குள் இருப்பதால் வருமான வரி வராது. வருமான வரி சட்டப் பிரிவு 87-A ன் படி வரிச் சலுகை ரூ.20,000 வழங்கப்படுவதால் உங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2.70 லட்சத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே வருமான வரி உண்டு.
தபால் நிலையத்தில் ‘பான்’ எண் கேட்கிறார்களே?
தபால் நிலையத்தில் ரூ.20 ஆயிரம் டெபாசிட் செய்ய சென்றோம். ஆனால், ஏற்கெனவே கணக்கில் ரூ.30 ஆயிரம் இருப்பு இருப்பதால் ‘பான் கார்டு’ வேண்டும் என்கின்றனர். இதற்கு மாற்று வழி என்ன?
- பெயர் குறிப்பிடாத வாசகி
உங்களது தபால் அலுவலக கணக்கின் இருப்பானது ரூ.50 ஆயிரத்தை தாண்டும் போது கட்டாயம் ‘பான்’ எண் கொடுக்க வேண்டும். வேண்டுமானால், இப்போது நீங்கள் 19,900 ரூபாய் வரை ‘பான்’ இல்லாமல் செலுத்தலாம். எதிர்கால பணப் பரிமாற்றங்கள் அனைத்துக்கும் ‘பான்’ எண் கட்டாயம் என்ற நிலை வரவிருப்பதால் நீங்கள் ‘பான்’ எண் பெற்றுக்கொள்வதே நல்லது.
டெபாசிட்டை எடுக்க ‘பான்’ தேவையா?
என் தந்தை அவரது விவசாய வருமானத்தை கூட்டுறவு வங்கியில் ‘பான் கார்டு’ இல்லாமல் டெபாசிட் செய்துள்ளார். தற்போது அந்தப் பணத்தை எடுப்பதற்கான வழி என்ன?
- வரதராஜன், நாமக்கல்
விவசாய வருமானத்துக்கு வரி வராது என்றாலும் உங்களது தந்தை, ‘பான்’ எண் பெற்று வங்கிக் கணக்கில் இணைத்துக் கொள்வது நல்லது. சிட்டா- அடங்கல் மூலம், உங்களது தந்தை எவ்வளவு நிலம் வைத்துள்ளார், அதில் என்ன பயிரிட்டார் போன்ற ஆதாரங்களும் வரி விலக்கு பெற தேவையானவை. தற்போது சேமிப்பில் உள்ள உங்கள் தந்தையின் பணத்தை மாத்திரமின்றி, அவர் வேறு ஏதாவது ஃபிக்ஸட் டெபாசிட் செய்திருந்தால் அதற்கான முதிர்வு தொகையை எடுக்கவும் ‘பான்’ எண் தேவைப்படும்.
பணத்தை எடுத்து இன்னொரு வங்கியில் செலுத்தலாமா?
அமெரிக்காவில் உள்ள உறவினர் ஒருவர் இங்குள்ள அவரது பெற்றோருக்கு மாதா மாதம் வங்கி வழியாக பணம் அனுப்புகிறார். அதில் சேமிக்கும் தொகையை அவர்கள் இன்னொரு வங்கியில் செலுத்தி வருகிறார்கள். இதற்கு ஏதாவது கேள்வி வருமா? அயல் நாட்டில் சம்பாதித்து வரும் பணத்துக்கும் வரி விதிக்கப்படுமா?
- ராஜாராம், மதுரை
வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் என்.ஆர்.ஐ. அல்லது ‘ரெசிடென்ட்’ ஆக இருந்தால் அவர்கள் முறையான வழியில் அனுப்பும் பணத்துக்கு வருமான வரி இல்லை. வசிக்கும் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப, அவர்கள் அனுப்பும் பணத்துக்கு அங்கு வரி கட்டி இருப்பார்கள். ஆனால், அவர்கள் அனுப்பும் பணத்தை வேறு வங்கியில் செலுத் தும் போது, நிரந்தரக் கழிவுகளோடு சேர்த்து ரூ.2.70 லட்சம் வரை செலுத்தலாம். அதற்கு மேல் செலுத்தினால் வருமான வரி உண்டு.
கையிருப்புப் பணத்தை வங்கியில் போடலாமா?
அரசு ஊழியர்களான நானும் என் மனைவியும் வருமான வரி செலுத்துகிறோம். நாங்கள் சேமித்து வைத்துள்ள பணம் தலா ரூ.2 லட்சத்தை ஸ்டேட் வங்கியில் செலுத்தலாமா?
- பெயர் குறிப்பிடாத வாசகர்
உங்கள் கையில் உள்ள கையிருப்புப் பணம் ஏற்கெனவே நீங்கள் வருமானத்தில் காட்டி வரி கட்டிய பணமாக இருந்தால் சிக்கல் இல்லை. சம்பள பணத்தை அறவே எடுக்காமல் இருந்துவிட்டோ அல்லது முழுமையாக எடுத்துச் செலவு செய்துவிட்டோ இப்போது திடீரென ஆளுக்கு 2 லட்சத்தை வருமானத்துக்கு பொருந்தாமல் டெபாசிட் செய்தால் பிரச்சினைக்குரியது தான். அப்படி பிரச்சினை வந்தால், அது வரி கட்டிய வருமானத்துக்கு உட்பட்ட தொகைதான் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டி இருக்கும்.
கல்விக் கடன் இருக்கையில் சேமிப்பு பணத்தை எடுக்கலாமா?
அரசு ஊழியரான நான் எனது மகள்கள் இருவருக்கு ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளேன். எனக்கு 3 வங்கிகளில் சேர்த்து ரூ.1.80 லட்சம் சேமிப்பு உள்ளது. கல்விக்கடன் வாங்கியிருப்பதால் என்னுடைய சேமிப்பு பணத்தை எடுப்பதில் சிக்கல் வருமா?
- கே.என்.சஃபியுல்லா, கோபிசெட்டிபாளையம்
கல்விக் கடனுக்கும் சேமிப்புக்கும் சம்பந்தம் இல்லை. உங்களது சேமிப்பு ரூ.1.80 லட்சம் என்பதால் வருமான வரி வராது. மத்திய அரசின் கல்விக்கடன் திட்டப்படி, பெற்றோர் அக்கடனைக் கட்ட வேண்டியது இல்லை. மாணவர்கள் சுயமாக சம்பாதித்து அவர்களாகவே எதிர்காலத்தில் அக்கடனை செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
செல்லாத ரூபாய் 8 லட்சத்தை வங்கியில் போடலாமா?
எனது மருந்து மொத்த வணிகத்தில் மாதம் ரூ.50 லட்சம் வரை, ரசீதுடன் கூடிய பண பரிமாற்றம் நடக்கிறது. நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு வசூலான செல்லாத நோட்டுகள் ரூ.8 லட்சத்தை வங்கியில் செலுத்தலாமா?
- பெயர் குறிப்பிடாத வாசகர்
மருந்து வணிகத்துக்கு விதிவிலக்கு இருப்பதால் நவம்பர் 24 வரை நீங்கள் செல்லாத நோட்டுகளை வாங்கலாம். வசூலாகும் பணத்தை நடப்பு அல்லது ஓவர் டிராஃப்ட் கணக்குகளில் பயப்படாமல் செலுத்தலாம். அரசு அனுமதிக்காத பட்சத்தில் 24-ம் தேதிக்குப் பிறகு இந்த நோட்டுகளை நீங்கள் வாங்கக்கூடாது.
திருமணத்துக்கு கடன் பெற்று வங்கியில் செலுத்தலாமா?
நானொரு விவசாயி. என் மகள் திருமணம் 2 மாதத்தில் வருகிறது. எனக்கு நிரந்தர இருப்பு தொகை ரூ.9 லட்சம் வங்கியில் உள்ளது. திருமணத்துக்காக கூடுதலாக தேவைப்படும் இன்னும் சில லட்சங்களை உறவினர்கள், நண்பர்களிடம் பெற்று வங்கியில் செலுத்தினால் வருமான வரி கேள்வி வருமா?
- சவுந்திரராஜன், செம்மாஞ்சேரி
விவசாய வருமானமாக இருந்தால் தற்போது இருப்பில் உள்ள 9 லட்சத்துக்கு அதற்கான ஆவணங்களை வைத்திருப்பீர்கள். கூடுதலாக நண்பர்களிடம் கடன் வாங்கினால் அதை ரொக்கமாக இல்லாமல் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் மூலமாக பெற்று திருமண செலவுகளையும் அவ்வாறே செய்யுங்கள். இப்படி வரவு - செலவு செய்தால் திருமணத்துக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.
தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்