Published : 12 Nov 2016 11:58 AM
Last Updated : 12 Nov 2016 11:58 AM

கோவை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்த ஏடிஎம் மையங்கள்

கோவையில் உள்ள பெரும்பாலான ஏடிஎம்-களில் நேற்று பணம் இல்லாததால், ரூ.2 ஆயிரமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்த பொதுமக்கள், மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாயினர்.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் சிலருக்கு மட்டுமே பணம் கிடைத்து. இதனால், மக்களிடையே மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில், 11-ம் தேதி முதல் ஏடிஎம்-கள் செயல்படத் தொடங்கும், அதிகபட்சம் ரூ.2 ஆயிரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, நேற்று காலை 7 மணி முதலே ஏடிஎம் மையங்களை மக்கள் முற்றுகையிடத் தொடங்கினர். ஆனால், பெரும்பாலான ஏடிஎம்-களில் பணம் இருப்பு இல்லாததால், மக்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாயினர்.

அன்றாட செலவுக்கே பணமில்லை…

கோவை புலியகுளத்தைச் சேர்ந்த ஜவுளித் தொழிலாளி செபாஸ்டின் கூறும்போது, “நான் ரெட்ஃபீல்டு பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குச் சென்றபோது, அங்கு யாருமே இல்லை. உள்ளே சென்று இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை செலுத்தி பணம் எடுக்க முயன்றபோது, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இருப்பு இல்லை என்று காண்பித்தது. இதனால், ரூ.2 ஆயிரமாவது கிடைக்கும் என்ற எனது நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் தவிக்கிறேன்” என்றார்.

கோவை ரயில் நிலையத்தில் அமைக்கப்படுள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் நேற்று செயல்படவில்லை. இதனால், பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்களில் வந்த மக்கள், பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர். ரயிலில் கோவைக்கு வந்து, அங்கிருந்து நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பலர், பேருந்துக்குக் கூட பணமின்றித் தவித்தனர்.

பால் வாங்க பணமில்லை

நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிக்கோரை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (35) கூறும்போது, “நாங்கள் 6 பேர் சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் திருப்பதி சென்றோம். எங்களிடமிருந்த ரூ.100, ரூ.50 நோட்டுகளை அங்கு செலவளித்துவிட்டோம். கடந்த 2 நாட்களாக திருப்பதி தேவஸ்தானம் வழங்கிய இலவச உணவைச் சாப்பிட்டோம். தற்போது உதகை செல்வதற்காக, ரயில் மூலம் கோவை வந்தோம். எங்களிடம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மட்டுமே உள்ளன. அவற்றை கடைக்காரர்கள் பெற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதனால், குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட முடியாமல் தவிக்கிறோம். எப்படி ஊருக்குச் செல்வோம் எனத் தெரியவில்லை” என்றார்.

இதேபோல, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வங்கிகளில், இந்தியன் வங்கி ஏடிஎம்கள் உள்ளிட்ட சில வங்கிகளின் ஏடிஎம்-கள் மட்டுமே செயல்பட்டன. பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படவில்லை.

வங்கிகளில் திரண்ட மக்கள்

மேலும், வங்கிகளில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்யவும் ஏராளமானோர் நேற்று திரண்டனர். பெரும்பாலான வங்கிகளில் மக்கள் திரண்டதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கோவை புலியகுளத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் நேற்று காலை 7 மணிக்கே பொதுமக்கள் திரண்டனர். பணம் மாற்ற வந்தவர்களுக்கு தனி வரிசை, டெபாசிட் செய்ய வந்தவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டது. அப்போதும், மிக நீண்டவரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் வங்கிக்கு வெளியே காத்திருந்த பின்னரே, வங்கிக்குள் சென்று பணத்தை டெபாசிட் செய்ய முடிந்ததாக பலர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த பலர், கூட்டத்தைப் பார்த்தவுடன், வெகுநேரம் காத்திருக்க விருப்பமின்றி அங்கிருந்து திரும்பிவிட்டனர். அங்கு வந்த சிலர் கூறும்போது, “மருந்து வாங்க ரூ.200 பணம்கூட இல்லை. வங்கிகளில் அதிகபட்சம் ரூ.4,000 மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தனர். ஆனால் இங்கு வெகுநேரம் காத்திருந்தால்தான், பணம் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்” என்றனர். கைக்குழந்தையுடன் வந்த சிலரும், கூட்டத்தைப் பார்த்து பயந்து, பணம் மாற்றாமலேயே திரும்பிச் சென்றனர்.

ரயில் நிலையத்தில்…

கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க வந்தவர்களிடம், சரியான சில்லறை கொடுத்தால்மட்டுமே டிக்கெட் கொடுக்க முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, “அனைவருமே ரூ.500, ரூ.1,000 கொண்டுவந்தால் எப்படி சில்லறை கொடுப்பது? எனவேதான் டிக்கெட் தொகைக்குரிய சரியான பணத்தைக் கொடுத்தால், டிக்கெட் கொடுத்துவிடுகிறோம்” என்றனர்.

தொழிலாளிகள் தவிப்பு

இதே பிரச்சினையால், ரயில்வே பார்சல் நிலையத்துக்கு வரும் பார்சல்களின் எண்ணிக்கையும் நேற்று குறைந்துவிட்டது. அங்கிருந்த கூலித் தொழிலாளி முகமது கனி கூறும்போது, “ரயில்கள் மூலம் வரும் பார்சல் களைக் கையாளும் பணியில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம்.

கடந்த 2 நாட்களாக இங்கு வரும் பார்சல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் வருமானம் இல்லாமல் தவிக்கிறோம். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வரவேற் கத்தக்கதுதான்.

அதேசமயம், எங்களைப் போன்ற கூலி தொழிலாளர்களின் சிரமத்தை அரசு உணரவில்லை என்பது வேதனையளிக்கிறது” என்றார்.

கையில் இருந்த ரூ.100, ரூ.50 நோட்டுகளை கடந்த 2 நாட்களில் செலவளித்த நிலையில், ஏடிஎம்-களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தவர்கள் நேற்று மிகுந்த ஏமாற்றமடைந்தனர். குறிப்பாக, வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் தங்கி, பல்வேறு பணிகளுக்குச் செல்வோர், உணவுக்குக்கூட பணம் இல்லாததால் பெரிதும் வேதனைக்கு உள்ளாயினர்.

ஒரு சில வங்கிகளில் மட்டுமே பழைய நோட்டுகளுக்குப் பதிலாக, ரூ.4 ஆயிரம் கொடுத்தது மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x