

பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தில் இரு கிராம மக்களிடையே ஏற்பட்ட மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் கடைகள் மூடப் பட்டன. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வெள்ளியூர், புன்னம்பாக்கம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இவ்விரு கிராம மக்களிடையே, தாமரைப்பாக்கம் அடுத்த அணைக்கட்டு கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த அம்மன் கோயில் திருவிழாவின்போது, விழா நடத்துவது தொடர்பாக மோதல் வெடித்தது. இது தொடர்பாக, வெங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை காலை தாமரைப்பாக்கம் கூட்டுரோடு பகுதிக்கு வந்த புன்னம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குருசாமி, கார்த்திக் ஆகிய இருவரை, வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். மேலும், குருசாமியின் ஆட்டோ, புன்னம்பாக்கத்தைச் சேர்ந்த வர்கள் பணிக்குச் சென்ற தனியார் நிறுவன வேன் ஆகிய வற்றின் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த புன்னம்பாக்கத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டோர், தாமரைப்பாக்கம் கூட்டுரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் பகுதியில் ஏன் சாலை மறியல் செய்கிறீர்கள் எனக் கூறி, வெள்ளியூர் கிராமத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தாமரைப்பாக்கம் மற்றும் புன்னம்பாக்கம் ஆகிய இரு கிராமத்தினரிடையே மோதல் வெடித்தது. இதில், புன்னம் பாக்கத்தைச் சேர்ந்த கஜேந் திரன், டில்லிபாபு ஆகியோர் தாக்கப்பட்டனர். தாமரைப் பாக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை, 2 மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன.
பக்கத்து கிராமத்திலும் மோதல்
இந்த மோதல்களின் எதிரொ லியாக ஆரிக்கம்பேடு பகுதியி லிருந்து கோயம்பேடுக்கு மலர்களை ஏற்றிச் சென்ற வேனை லெட்சுமிநாதபுரத்தைச் சேர்ந்த வர்கள் மறித்துள்ளனர்.
வேனில் இருந்த ஆரிக்கம் பேடுவைச் சேர்ந்த வேலு, ஏழுமலை உள்ளிட்ட வர்களை அவர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில், படுகாயமடைந்த வேலு, ஏழுமலை ஆகிய இருவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவ மனை மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், எஸ்.பி. சரவணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். முந்நூறுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப் பட்டனர். கலவரப் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்தன.