தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ சோதனை சாவடிகளில் தினசரி ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா. அருகில், வேலூர்  மோட்டார் வாகன சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் லோகநாதன், தொழிலதிபர் கலைமகள் இளங்கோ உள்ளிட்டோர்.
வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா. அருகில், வேலூர் மோட்டார் வாகன சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் லோகநாதன், தொழிலதிபர் கலைமகள் இளங்கோ உள்ளிட்டோர்.
Updated on
2 min read

வேலூர்: தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து (ஆர்டிஓ) சோதனை சாவடிகளால் தினசரி ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தெரிவித்தார்.

மத்திய நெடுஞ்சாலை, விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வேலூர் மாவட்ட வணிகர்கள், பேருந்து, லாரி உரிமையாளர்களுடன் வேலூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா தலைமையில் லாரி, பேருந்து உரிமையாளர்கள் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் சண்முகப்பா, செய்தியாளர்களிடம், கூறும்போது, ‘‘தேசிய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் மற்ற மாநிலங்களை காட்டிலும் டீசல் விலை 10 ரூபாய் வரை குறைந்துள்ளது. பிற மாநிலங்கள் மத்திய அரசு மீது குறைகூறி மக்கள் மீது போர் தொடுத்து வருகின்றன.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் டீசல் விலையை குறைப்பதாக அறிவித் திருந்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிக லாரிகளை இயக்கும் தமிழகம் தேசிய அளவில் பின் தங்கி வருகிறது. டீசல் விலையை குறைக்காததால் லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.2.50 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

இதேபோல், பாஜக ஆளும் மாநிலங்களில் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தின் (ஆர்டிஓ) எல்லை சோதனை சாவடிகள் இல்லை. ஆனால், தமிழகத்திலுள்ள ஆர்டிஓ சாதனை சாவடிகளால் தினசரி ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது. இந்த ஆர்டிஓ சோதனை சாவடிகளால் எந்தப் பயனும் இல்லை. லஞ்சம் பெறுவதற்காகவே ஆர்டிஓ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆர்டிஓ சோதனை சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதற்கு தமிழக அரசை பாராட்டுகிறோம். மேலும், வாகனங்களுக்கு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதில் மத்திய அரசு 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாடிகளை அகற்ற வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒப்பந்தம் முடிந்த 23 சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றுவோம் என முதல்வர் கூறினார். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை உடனடியாக அமலுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும். சுங்கச்சாவடிகளில் விளைப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும், காலி காஸ் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், சுங்கச்சாவடியை சுற்றி உள்ள 20 கிலோ மீட்டருக்குள் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.

சுங்கச்சாவடி கூடாது என நாங்கள் கூறவில்லை. பாஸ்டேக் அமைத்தும் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை முன் பணமாகவே சுங்க கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளோம். இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வரும் 6-ம் தேதி நாமக்கல்லில் நடைபெறவுள்ள தென் மாநில லாரி உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்க்கமாக எங்கள் முடிவை அறிவிப்போம்’’ என்றார்.

சுங்கச்சாவடி கூடாது என நாங்கள் கூறவில்லை. பாஸ்டேக் அமைத்தும் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in