

சென்னை: கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க மென்பொருள் ஒன்றை தமிழக ஊரக வளர்ச்சி துறை உருவாக்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஐனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) என்று வருடத்திற்கு 4 முறை கிராமசபைகள் கூட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதன்படி வரும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தைக் முன்னிட்டு நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில், கண்காட்சி, சிறந்த ஊழியர்களுக்கு பாராட்டு மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், இந்த கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் ‘நம்ம கிராம சபை’ என்கிற கணிணி மற்றும் தொலைபேசி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.